அம்மா ஐ.சி.யூ.வில்… – ஆனாலும் ‘வரிவிலக்கு வசூல் வேட்டை’ தொடர்கிறது…

775

தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மு.கருணாநிதி தொடங்கி வைத்த வியாபாரம்தான் இந்த – வரிவிலக்கு வசூல் வேட்டை.

ஏறக்குறைய சதுரங்க வேட்டைக்கு சற்றும்  சளைத்தது அல்ல, இந்த வரிவிலக்கு வசூல் வேட்டை.

வணிகவரித்துறையின் அமைச்சர் தொடங்கி, அதிகாரிகள், பியூன் வரை செமத்தியாய் கல்லா கட்டுகிற பிசினஸ் இது.

தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி அறிவிக்க, வணிகவரித்துறை அமைச்சருக்கு அது அட்ஷய பாத்திரமாக மாறியது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, வரிவிலக்கு விஷயத்தில் சின்ன மாற்றம் செய்தார்.

அதாவது தமிழில்  தலைப்பு வைத்தால் மட்டும் போதாது யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதா செய்த மாற்றம்.

அதோடு, வரிவிலக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்பதை சிபாரிசு செய்ய ஒரு குழுவையும் அமைத்தார்.

வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட படங்களை இந்த குழுவினர் பார்த்துவிட்டு வரிவிலக்கு கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்தால்தான் வரிவிலக்கு வழங்கப்படும்.

இவர்கள் சிபாரிசு செய்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், முதல் ‘கவனிப்பு’ இவர்களுக்குத்தான்.

பூசாரி வரம் கொடுத்தால் மட்டும் போதாதே… சாமியும் வரம் கொடுக்க வேண்டும் அல்லவா?

வணிகவரித்துறையின் அமைச்சர், அதிகாரி என பலருக்கும் கட்டிங் கொடுத்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்று புலம்புகிறார்கள் படத்துறையினர்.

சின்ன பட்ஜெட் படம் என்றால் சுமார் 15 லட்சம், மீடியம் பட்ஜெட் 45 லட்சம், பெரிய பட்ஜெட் படம் என்றால் 1 கோடி என ரேட் நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர்.

இந்த கமிஷனை கொடுத்தால் ஷகிலா நடித்த மாமனாரின் இன்பவெறி படத்துக்குக் கூட வரிவிலக்கு கொடுப்பார்கள்.

இந்த வாரம் வெளியான ரெமோ, றெக்க, தேவி ஆகிய மூன்று படங்களில் றெக்க படத்துக்கு வரிவிலக்கு கிடைப்பதில் முதலில் சிக்க ஏற்பட்டதாம்.

அதாவது, றெக்க என்று பேச்சுத் தமிழில் தலைப்பு வைத்ததால் வரிவிலக்கு கிடைப்பது கஷ்டம்தான் என்று கட்டையைப் போட்டிருக்கிறார்கள்   படத்துறைக்கும் வணிகவரித்துறைக்கும் பாலமாக செயல்படுகிற இடைத்தரகர்கள். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு கட்டிங்கின் கணத்தை ஏற்றியதும் அடுத்த நாளே வரிவிலக்கு கிடைத்ததாக  தகவல் அடிபடுகிறது.

ரெஜினா மோத்வானி என்ற பிறமொழிப்பெயரின் சுருக்கமான ரெமோ படத்துக்கும் கூட வெயிட்டாக கவனித்த பிறகே வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொடுமையிலும் கொடுமை தேவி படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டதுதான்.

அதாவது டெவில் என்ற பெயரில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தேவி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவருக்கு வெயிட்டாக கவனித்து தேவி படத்துக்கு வரிவிலக்கு சலுகையைப் பெற்றுள்ளனர். அதோடு, அ.தி.மு.க.வில் உள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமாருக்கு தேவி படத்தில் ஒரு வேஷம் கொடுத்து நடிக்கவும் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

இதில் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அரசு இயந்திரமே செயல் இழந்துபோயிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த வரிவிலக்கு வசூல் வேட்டை மட்டும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.