நான்கு நாட்களாக நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ்…

974

மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்துள்ளதால் தமிழக அரசின் கேளிக்கைவரி ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதே கேளிக்கை வரியை உள்ளாட்சி – நகராட்சி வரி என்ற பெயரில் அறிவித்தது தமிழக அரசு.

தமிழக அரசின் 30 சதவிகித கேளிக்கை வரியினால் தமிழ்த்திரையுலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பான பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால் நான்காவது நாளாக இன்றும் தியேட்டர்களை மூடும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று இது சம்பந்தமாக தமிழக முதல்வரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து கேளிக்கை வரியை ரத்துச் செய்யக் கோரி மனு அளித்தனர்.

இதற்கிடையில் இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவரான மு.க.ஸ்டாலின், கேளிக்கை வரியால் தமிழ் திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சினிமா தொழில் நலிவடைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும் பேசினார்.

அதோடு, கேரள அரசை போன்று தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்..

கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி.வரியை இரட்டை வரியாக கருத முடியாது என்று பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, “திரைத்துறையினருடன் அமைச்சர்கள் வீரமணி, கடம்பூர் ராஜு, தலைமை செயலாளர் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்று அறிவித்தார்.

அதன்படி இன்று மாலை இந்த பிரச்சனை சம்பந்தமாக தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின்போது, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஆறுபேர் அரசு தரப்பில் ஆறு அடங்கிய குழு அமைத்து விரைவில் கேளிக்கை வரி மற்றும் தியேட்டர் கட்டணத்தை உயர்த்துவது பற்றி முடிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைக் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தியேட்டர் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து நாளை முதல் தியேட்டர்கள் வழக்கம்போல செயல்படவிருக்கின்றன.

-ஜெ.பிஸ்மி