பியூஷ் மனுஷ் என்கிற ரியல் ஹீரோவும்…. – சூர்யா என்கிற ரீல் ஹீரோவும்…..

835

கபாலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க… நெருங்க…. மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனமும் கபாலி படத்தின் மீதே குவிந்திருந்தது.

அதனாலேயே பல விஷயங்கள் முக்கியத்துவம் பெறாமலே போய்விட்டன.

அதில் மிக முக்கியமான ஒன்று… சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது சிறைச்சாலையில் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதல்.

கபாலி மீதான கவனக்குவிப்பில் பியூஷ் மனுஷ் விவகாரத்தில் போதிய எழுச்சி ஏற்படவில்லை.

கபாலி பரபரப்பில் கண்டுகொள்ளப்படாமல் போனது பியூஷ் மனுஷ் என்கிற ரியல் ஹீரோ மட்டுமல்ல, சூர்யா என்கிற ரீல் ஹீரோவும்தான்.

கபாலி படம் திரைக்கு வந்த அடுத்த நாள்… அதாவது 23. 07. 2016 சனிக்கிழமை அன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்.

பொதுவாக, சினிமா நடிகரின் பிறந்தநாள் என்றால் ஒரு பக்கம் மீடியாக்களிலும்… இன்னொரு பக்கம் சமூகவலைத்தளங்களிலும் அதுவே முக்கிய இடம் பிடிக்கும்.

அன்னதானம் செய்தார்….

ரத்த தானம் செய்தார்….

நோட்புக் வழங்கினார்….

– என்று பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது.

23. 07. 2016 சனிக்கிழமை அன்று பிறந்தநாள் கொண்டாடிய சூர்யாவும் கூட ஏறக்குறைய இதுபோன்ற ‘சடங்குகளை’ எல்லாம் செய்தார்.

அதோடு, 2 வருட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

இந்த செய்தி மீடியாக்களில் பெரிய அளவில் ப்ளாஷ் ஆகும் என எதிர்பார்த்த சூர்யாவுக்கு நிச்சயமாக மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும்.

காரணம்…. கபாலி பரபரப்பில் சூர்யாவின் பிறந்தநாளை மீடியாக்களை அவ்வளவாக கண்டுகொள்ளவே இல்லை.

சூர்யாவின் பிறந்தநாளுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் தராமல்போனதற்கு கபாலி பரபரப்பு மட்டும் காரணமில்லை.

இன்னொரு காரணமும் இருக்கிறது.

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மீடியாக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சூர்யாவோ மீடியாவை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.

மீடியாவை சந்தித்தால், நிச்சயமாக அஞ்சான், மாசு, 24 என வரிசையாக தோல்விப்படங்களில் நடித்தது பற்றி கேள்வி கேட்பார்கள்.

அதோடு, சிங்கம்-3 படம் பற்றி தோண்டித்துருவி கேள்வி கேட்பார்கள்…

பிறந்தநாளும் அதுவுமாக ரோட்டில் போகிற ஓணானை எடுத்து காதில்விட்டுக் கொள்வானேன் என்று நினைத்தாரோ என்னவோ, மீடியாவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் சூர்யா.

இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே நடந்த ஒரு சம்பவமும் மீடியாக்கள் மத்தியில் சூர்யா மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

அதாவது, அவர் நடித்த 24 படம் அண்மையில் வெளிவந்த நேரத்தில், படத்தின் புரமோஷனின்போது மீடியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டரில் புகழ்கிற சிலரை அழைத்து அவர்களுக்கு பேட்டி கொடுத்தார் சூர்யா.

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் மீடியாக்கள் மத்தியில் சூர்யாவுக்கு எதிரான கோபம் வெளிப்பட்டது.

அது 24 படத்தின் விமர்சனங்களில் வெளிப்பட்டதோடு, அந்தப் படத்தின் படு தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த விஷயமும் இப்போது சேர்ந்து கொண்டதால்தான், சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை.