சூர்யா நடத்திய ரகசிய ஆலோசனை…!

1068

‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட த்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.

சூர்யாவின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காரைக்குடி பகுதியில் நடைபெற்றது.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயியாக நடிக்கும் கார்த்தி ரேக்ளா ரேஸ் ஒன்றில் கலந்து கொள்வதுபோல் ஒரு காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார் பாண்டிராஜ்.

ஏராளமான துணை நடிகர்கள் மற்றும் கிராமத்து மக்கள் முன்னிலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டபோது தன்னுடைய மகன் தேவ் உடன் நடிகர் சூர்யாவும் அங்கு சென்றிருந்தார்.

அப்போது இந்த காட்சியை தன்னுடைய மொபைலில் படமாக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதையே ஆதாரமாக வைத்து கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் மீது அனிமல் வெல்ஃபேர் போர்டு புகார் கொடுத்தது.

இந்த புகார் காரணமாக கடைக்குட்டி சிங்கம் படம் தணிக்கைக்கு வரும்போது மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ரேக்ளா ரேஸ் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளநிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சி நடைபெற்றுள்ளது. இதற்காக உண்மையிலேயே ரேக்ளா ரேஸ் நடத்தியுள்ளனர் என்று கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கட்டையைப்போடும் வேலையைத்தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் பீட்டா அமைப்பு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சமாளிக்க, நீதித்துறையில் செல்வாக்குமிக்கவரான இளம் கவிஞரை துணைக்கு அழைத்து அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் சூர்யா.

சில மாதங்களுக்கு முன் நீலகிரி நீதிமன்றம் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தபோது, அதிலிருந்து அவருக்கு நிவாரணம் பெற்றுத்தந்ததும் இந்த கவிஞர்தான் என்று அப்போது படத்துறையில் பேசப்பட்டது.

தற்போது கடைக்குட்டி சிங்கம் விவகாரத்திலும் அதே கவிஞர் சூர்யாவுக்கு கைகொடுத்துள்ளார்.