சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட… – இசையமைப்பாளர் தாஜ்நூரின் மாடர்ன் கானா…!

788

விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்ட்ராபெரி’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தாஜ்நூர்.

இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

சினேகன் ஹீரோவாக நடித்து கவரும் ‘கள்ளன்’ என்ற புதிய திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார் தாஜ்நூர்.

இந்த படங்கள் குறித்தும் அதில் இசையமைப்பாளர் தாஜ்நூரின் பங்களிப்பு பற்றியும் பேசினோம்.

‘ஸ்ட்ராபெரி’ படத்தில் சக இசையமைப்பாளர்களையே பாட வச்சுருக்கீங்களே?

ஆமாம்… இசையமைப்பாளர்கள் டி.இமான், மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் அற்புதமான இரண்டு ட்யூன்களுக்கு பாடிக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரபல ஹீரோ சித்தார்த்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடல்களும் வெஸ்டர்ன் ஸ்டைலில் அமைக்கப்பட்டன.

ஒரு பாடலை நேஷனல் அவார்டு வின்னர் உத்ரா பாடியிருக்கிறார். இவர் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள். இது முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டது. அந்த பாடல் பதிவு செய்யப்பட்ட பின்பு, அதே பாடலை வீட்டில் போய் பாடிக் காட்டினாராம் உத்ரா. அதை கேட்ட உன்னி கிருஷ்ணனும் அவரது மனைவியும் நேரில் வந்து கைகொடுத்து, “மூணு நாள் என்னை உறங்க விடாமல் செய்துவிட்டது” என்று பாராட்டிவிட்டு போனது என்னால் மறக்கவே முடியாது.

முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் டி.இமானும், ஜி.வி.பிரகாஷ்குமாரும் நேரம் ஒதுக்கி பாடிக் கொடுத்ததையும் மறக்க முடியாது.

imman k

 

sid

 

gv

 

‘ஸ்ட்ராபெரி’யில் வேறென்ன விசேஷம்?

இதில் மாடர்ன் கானா என்றொரு ஸ்டைலை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட… என்று துவங்கும் அந்த பாடலை நோபில் என்றொரு புது பாடகர் பாடியிருக்கிறார்.

பாருங்கள்… அதுதான் இந்த வருஷம் எல்லா ஏரியாவிலும் நின்று அடிக்கப் போகிறது. பின்னணி இசை கோர்ப்புக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டோம். கிட்டதட்ட 300 மணி நேரம் ரீரெக்கார்டிங் டி.டி.எஸ் மிக்சிங்குக்காக மட்டும் ஆகியருக்கிறது.

அதுமட்டுமில்ல… அந்த பின்னணி இசைக்காக புதுசாவே சவுண்ட் டிசைன் பண்ணியிருக்கோம். ஹாலிவுட்லேர்ந்து ஆன் லைன்ல புதுசு புதுசா ஒலிகளையும் எபெக்ட்சையும் முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்தியிருக்கோம். படம் மிரட்டலா வந்துருக்கு.

வேறு என்னென்ன படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள்?

‘ஸ்ட்ராபெரி’, ‘கள்ளன்’ தவிர, சங்ககிரி ராஜ்குமாரின் ‘நெடும்பா’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறேன். ‘காந்தாரி’, ‘யானைமேல் குதிரை சவாரி’, ‘வெள்ளிக்கிழமை 13 ம் நாள்’ என்று வரிசையாக நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

‘நெடும்பா’ திரைப்படம் முடிந்து பின்னணி இசையமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த படம் மலைவாசிகள் தொடர்பான படம் என்பதால், நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.

நானும் ராஜ்குமாரும் காடுகளில் பல நாட்கள் திரிந்து காட்டுவாசிகள் பயன்படுத்தும் விதவிதமான இசைக்கருவிகளை வாங்கி வந்தோம். வெறும் மரத்தால் செய்யப்பட்ட கருவிகளும், மூங்கில், தோல் கருவிகள், மூச்சுக்காற்றை பயன்படுத்தும் கருவிகளால் பின்னணி இசையமைத்து வருகிறேன்.

இந்த படம் ராஜ்குமாரை இந்தியா முழுக்க பிரபலமாக்கிவிடும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏனென்றால் அந்த கதை அப்படி. அதுமட்டுமல்ல, இந்த படத்திற்காக சென்னை தமிழ், கோவை தமிழ் போல அவரே ஒரு புதுத் தமிழை உருவாக்கியிருக்கிறார். அது எல்லோராலும் கவனிக்கப்படும்.

இது தவிர ‘தமிழ் பிள்ளை’ என்றொரு இசை ஆல்பம் தயாராகி வருகிறது. இலங்கை தமிழர்கள் தாயகம் விட்டு பல்வேறு மண்களில் தவித்து வருவதை இசையாக சொல்லிவிட்டோம். ஆனால் நமது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு போய் அவதிப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்ணீரோடு வெளிப்படுத்துகிற ஆல்பமாக இது இருக்கும். கவிக்கோ அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, இன்குலாப், பழனிபாரதி, யுகபாரதி, இஷாக், இக்பால் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

விரைவில் வளைகுடா நாடுகளில் இந்த ஆல்பத்தை லைவ் ஆஸ்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தி வெளியிடப் போவதாகவும் சொன்னார் தாஜ்நூர்.

வாழ்த்துக்கள்.