சென்ட்டிமெண்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்….

656

சென்ட்டிமெண்ட்  என்ற மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன துறைதான் திரைப்படத்துறை.

இங்கே தோற்றுப்போனவர்கள் மட்டுமல்ல, திறமை, உழைப்பால் வெற்றியடைந்தவர்களும் கூட தன்னுடைய வெற்றிக்கு அதிர்ஷ்டமும், நேரமும்தான் காரணம் என்று நம்புகிற கொடுமையும்  கோடம்பாக்கத்தில் சர்வசாதாரணம்.

இதற்கு சிவகார்த்திகேயன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?

தன்னுடைய குறுகியகால அசுர வளர்ச்சிக்கு அதிர்ஷ்டமே காரணம் என்று அழுத்தமாக நம்புகிறாராம் இவர்.

இப்படியொரு நம்பிக்கை இருப்பதினாலோ என்னவோ…. தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஏன்?

அவரது முந்தைய படமான ரஜினி முருகன் படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில்தான் வெளியிட்டனர்.

(விஜய் டிவி விழாவில் வெளியிட எண்ணி, கடைசி நேரத்தில் புரட்யூசர் கவுன்சில் கட்டையைப்போட்டதால் வேறுவழியில்லாமல் நட்டு நடுரோட்டில்… டன்லப் தெருவில் ரஜினி முருகன் படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டு வந்தது தனிக்கதை)

ரஜினி முருகன் படம் வெற்றியடைந்ததினால்,  ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கையும் சிங்கப்பூரில் வெளியிட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சைமா என்கிற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் குழுவினர் சிவகார்த்திகேயனை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டனர்.

சைமா விழா ஜூன்-30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலுள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடக்கவிருக்கிறது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் இடம் பெறும், ‘செஞ்சிட்டாளே’ என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடவிருக்கிறார்கள். ‘ரெமோ’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ரெமோ படத்தின் சிங்கிள் டிராக் சென்ட்டிமெண்ட் இப்படி இருக்க, படத்தின் ரிலீஸ்  விஷயத்திலும் சென்ட்டிமெண்ட் பார்க்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அதாவது, அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் செப்டம்பரில்தான் வெளியானது. வெற்றியும் பெற்றது.

எனவே ரெமோ படத்தையும் செப்டம்பரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.

அவரது கட்டளைப்படியே ‘ரெமோ’வை செப்டம்பரில் அதாவது விநாயக சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.