சிவகார்த்திகேயன் – பொன்ராம் படம் யாருக்கு? – அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்….

1438

பசங்க புரடக்ஷன்ஸ், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்  போன்ற பிற தயாரிப்பாளர்களின்  படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தன்னுடை நட்சத்திர அந்தஸ்து உயர்ந்ததும் இனி வெளிநிறுவன படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

அதோடு தன் நண்பர் ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதையும் நடைமுறைப்படுத்தினார்.

அதன் முதல் தயாரிப்பாக உருவான ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அடுத்து மோகன் ராஜா, பொன்ராம், ரவிகுமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவும் கமிட்டானார்.

இத்தனை படங்களும்  24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள்.

சிவகார்த்திகேயனின் இந்த அதிரடி முடிவு ‘ஸ்டுடியோக்ரீன்’ ஞானவேல்ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் ‘வேந்தர் மூவிஸ்’ மதன் தரப்பில் டி.சிவா ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்தது.

“எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் நடித்து தருவதாக சொன்னதன்பேரில் சிவகார்த்திகேயனுக்கு  முன்பணம் கொடுத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு  படம் பண்ணாமல் 24 ஏ.எம். நிறுவனத்துக்கு மட்டுமே தொடர்ச்சியாக  கால்ஷீட் கொடுத்து படம் நடித்து வருகிறார்” என்று  தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சில மாதங்களுக்கு முன் மூன்று தயாரிப்பாளர்களும் புகார் அளித்தார்கள்.

சிவகார்த்திகேயனோ ஞானவேல்ராஜாவிடம் மட்டும்தான் படம் பண்ணுவதற்காக ஒப்பந்தம் போட்டு, முன்பணம் வாங்கினேன். மற்ற இரண்டு பேரிடமும் நயா பைசா வாங்கவில்லை என்று தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.

எங்களுக்கு கால்ஷீட்டை உறுதி செய்தால்தான்  நவம்பர் 11 அன்று சிவகார்த்திகேயன் நடிக்க, மோகன் ராஜா இயக்கத்தில் தொடங்கும் படத்தின் படப்பிடிப்பு  தொடங்க வேண்டும் என்று மூன்று தயாரிப்பாளர்களுமே தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவித்தார்கள்.

இந்தப்பிரச்சினையில் முடிவு தெரியாமல் இழுத்துக்கொண்டேபோனதால் திட்டமிட்டபடி நவம்பர் 11 அன்று சென்னையில் துவங்கப்படவில்லை.

பேச்சுவார்த்தையில் சுமுகமுடிவு எட்டப்படவில்லை, அதனால்தான் சிவகார்த்திகேயனின் புதுப்படம் தொடங்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 11 இரவு மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கும் – ‘ஸ்டுடியோக்ரீன்’ ஞானவேல்ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் ‘வேந்தர் மூவிஸ்’ மதன் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பஞ்சாயத்தில் எட்டப்பட்ட முடிவு என்ன?

பஞ்சாயத்தில் கலந்து கொண்ட நாட்டாமைகளில் ஒருவரான தயாரிப்பாளர் சங்க நிர்வாகியிடம் விசாரித்தோம்…

“மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் ஞானவேல்ராஜா நிறுவனத்திற்கு படம் பண்ணிதருவதாக  சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டார். அதே நேரம்  ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன்,  ‘வேந்தர் மூவிஸ்’ மதன்  இருவருக்கும் கால்ஷீட் தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். நாங்கள்  அவரை கன்வின்ஸ் பண்ணிய பிறகு  ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன், ‘வேந்தர் மூவிஸ்’ மதன்  இருவருக்கும் சேர்த்து ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்.இந்த கமிட்மெண்ட்களை முடித்துவிட்டுத்தான் தனது அடுத்த படங்களை அவர் முடிவு செய்வார்.” என்று தெரிவித்தார்.

பஞ்சாயத்து முடிவடைந்து ஒருவழியாய் சிவகார்த்திகேயனின் புதுப்படம் துவங்கிவிட்டாலும், புதிய பிரச்சனை ஒன்று முளைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் – பொன்ராம் இணையும் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்கிறாராம் ஞானவேல்ராஜா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை அறிமுகப்படுத்தியது நான்தான். அதனால் பொன்ராம் –  சிவகார்த்திகேயன் இணையும் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்கிறாராம்  ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன்.

அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமா?