சித்தார்த் – அட்டைக் கத்தி ஹீரோக்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோ…

1181

தமிழ்த்திரைப்படத்துறையை தமிழகஅரசு தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது.

திரைப்படக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய விருதுகள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன.

சிறுபடங்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானியம் பல ஆண்டுகளாக வழங்கப்படவே இல்லை… (வழங்கப்படக் கூடாது என்பது நம்முடைய நிலைப்பாடு)

5 லட்சத்திலிருந்து 75 லட்சம்வரை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப வணிக வரித்துறை அமைச்சகத்துக்கு லஞ்சம் கொடுத்தால்தான் வரிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் கட்டணத்தை பல மடங்கு அதிகமாக்கியது…

திரைப்படங்களுக்கு 18 மற்றும் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசு சார்பில் 30 சதவிகித வரி விதிக்கப்பட்டது…

– என திரைப்படத்துறையை நசுக்கும் வேலைகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இதை தட்டிக்கேட்கும் அளவுக்கு முதுகெலும்பு உள்ள ஆட்கள் திரைப்படத்துறையில் இல்லாமல் போனதுதான் கொடுமை.

திரைத்துறைக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை நெஞ்சுநிமிர்த்தி கேட்க திராணியற்றி கோழைகளாக, அரசங்கத்தின் அடிமைகளாகவே இருந்தனர் -தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பழைய நாட்டாமைகள்.

அதனால், திரையுலகம் தொடர்ந்து நசிவுற்று நாசமாகப்போய்விட்டது.

இந்நிலையில், சினிமாவுக்கு அதிகபட்சமாக 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்த, நகராட்சி வரி 30 சதவீதம் என்று அறிவித்த தமிழக அரசும் தன் பங்குக்கு திரைப்படத்துறையை காலி பண்ணும் வேலையில் இறங்கிவிட்டது.

இதை கண்டித்துள்ள நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

அதுமட்டுமல்ல, “திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச் சலுகை வழங்குவதிலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது. ” என்று வரிவிலக்கு வழங்குவதில் கோடிகோடியாய் வணிகவரித்துறை அமைச்சகம் லஞ்சம் வாங்குவதையும் தைரியமாக சாடியுள்ளார்.

“தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது.

யு சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு வழங்குவதற்கும் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன.

இவைபோதாது என்று தற்போது 30% உடன் ஜிஎஸ்டி வேறா? வெட்கக்கேடு.

இப்போது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய குழப்பங்களில் நம்மை வைத்து விளையாடுகிறார்கள்.” என்று வெளுத்து வாங்கியிருக்கிறார் சித்தார்த்.

அட்டைக் கத்தி ஹீரோக்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோ…

வெல்டன் சித்தார்த்.

 

-ஜெ.பிஸ்மி