எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1.கொலை, 2. தற்கொலை. – கந்து வட்டி காவு வாங்கியவரின் கண்ணீர் கடிதம்….

1289

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார்.

சசிகுமாரின் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, கிடாரி, பலே வெள்ளையதேவா, கொடிவீரன் போன்ற படங்களை தயாரித்த கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இணைதயாரிப்பாளர்.

பாலா இயக்கத்தில் கம்பெனி புரடக்ஷன்ஸ் தயாரித்த தாரை தப்பட்டை படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மதுரை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் 30 கோடி வாங்கியிருக்கிறார் சசிகுமார்.

கடனை திருப்பி செலுத்த முடியாமல் வட்டியை மட்டும் சசிகுமார் சார்பில் அசோக்குமார் கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சசிகுமாரின் கொடி வீரன் படத்தை அடுத்த வாரம் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார் அசோக்குமார்.

கொடிவீரன் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது அன்புச்செழியன் தரப்பு.

அதனால் அசோக்குமார் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

தன்னுடைய சாவுக்கு பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று விளக்கமாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார் அசோக்குமார்.

அவர் எழுதிய கடிதம்…

என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள்.

எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1.கொலை, 2. தற்கொலை.

கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம்.

நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு, சசிகுமார் கடவுளை விட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம்.

நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார்.

வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார்.

யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் , அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில்.

அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.

எனது உயிரினும் மேலான சசிகுமாரா என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை.

உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால் தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும்.

என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள்.

என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே. எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும்.

இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு.

என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான்.

என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை.

அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள், இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள்.

43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.
எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்.”

என்று அசோக்குமார் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். அன்புச்செழியன் பற்றி ஆயிரம் அசோக்குமார்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாலும், சட்டம் அவரது நிழலைக்கூட தொடாது என்பதே உண்மை.