மனைவி பெயரில் படம் இயக்குகிறாரா செல்வராகவன்?

selvaragavan

கோடம்பாக்கத்தில் பேர் சொல்லும்படியான படங்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் மிகவும் குறைவு.

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘கண்டநாள் முதல்’ இயக்குநர் வி.ப்ரியா, ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா, ஜே.எஸ்.நந்தினி, ‘பூவரசம் பீப்பீ’ இயக்குநர் ஹலிதா சமீம் என அண்மை வருடங்களில் அரைடஜனுக்கும் மேற்பட்ட பெண் இயக்குநர்கள் களம் இறங்கி இருக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றுமொரு பெண் இயக்குநர் அறிமுகமாக இருக்கிறார்.

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்தான் அவர்.

செல்வராகவனிடம் உதவியாளராக இருந்து, பின்னர் அவருக்கு மனைவியானவர் கீதாஞ்சலி.

அவர் தன் முதல் படமாக இயக்கவிருக்கும் படத்திற்கு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

பருத்திவீரன் ஹிட்டானதும் கார்த்தியை வைத்து செல்வராகவன் ஆரம்பித்த படத்தின் பெயர் – மாலை நேரத்து மயக்கம். பிறகு இந்தப் படத்தை ட்ராப் பண்ணினார் செல்வராகவன்.

பின்னர் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற அதே தலைப்பில் தன் தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார் செல்வராகவன். பிறகு அந்தப் படத்தையும் கிடப்பில் போட்டார்.

இதோ இப்போது ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற அந்த தலைப்பை மறக்காமல் தனது மனைவி இயக்கும் முதல் படத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.

ஆமாம்…கீதாஞ்சலி செல்வராகவன் திடீரென இயக்குநர் ஆனது ஏன்?

செல்வராகவனின் தம்பியான தனுஷின் மனைவி ஐஸ்வர்யா 3 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். தற்போது வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாகவும் செய்தி அடிபடுகிறது.

எனவே ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தானும் இயக்குநராக ஆசைப்பட்டு களத்தில் குதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு தகவலும் காதில் விழுகிறது…

தொடர்ந்து படுதோல்விப்படங்களைக் கொடுத்ததால் செல்வராகவன் இயக்கும் படங்களை இனி திருட்டு விசிடியில் கூட பார்ப்பதில்லை என்று ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். எனவே மனைவி பெயரில் செல்வராகவனே இயக்கப்போகிறார் என்பதே அந்த தகவல்.

உண்மையா இது?