தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் செல்வராகவன்

DSC_0227

செல்வராகவன் இயக்கிய படங்களில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போகாலனி ஆகிய இரண்டு படங்கள்தான் தவிர, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று செல்வராகவன் இயக்கிய மற்ற படங்கள் எல்லாமே தோல்விப்படங்கள்தான்.

கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் செல்வராகவனை இரண்டாம் உலகம் படத்தின் படு தோல்விக்குப் பிறகு திரையுலகம் சுத்தமாக மறந்துவிட்டது.

அவர் பெயரைச் சொன்னாலே ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் தலைதெறிக்க ஓடுமளவுக்கு நிலவரம் கலவரம் ஆகிக்கிடக்கிறது.

தன்னை வைத்து படம் எடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை, தனக்கு கால்ஷீட் கொடுக்க எந்த ஹீரோக்களும் தயாராக இல்லை என்பதால், தனுஷ் மூலம் சிம்புவை அணுகினார் செல்வராகவன்.

அவரிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்க வைத்துவிட்டு பிறகு கதை கேட்டார்.

கதை கேட்டபோது, ஏகப்பட்ட கண்டிஷன்களையும், கரெக்ஷன்களையும் சொல்லி செல்வராகவனின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு.

அதுமட்டுமல்ல, பாண்டிராஜ், கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்திருந்த சிம்பு, அந்த படங்களில் நடித்ததும் செல்வராகவன் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.

அவர் சொன்னதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார் செல்வராகவன்.

ஸ்கிரிப்ட் தயாரானதும், அப்படத்தை தயாரிக்கவிருந்த பிவிபி நிறுவனத்திடம் படம் தொடர்பான பேச்சுவார்த்தையை சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறார் செல்வராகவன்.

ஏற்கனவே செல்வராகவனை வைத்து இரண்டாம் உலகம் படத்தைத் தயாரித்து, 20 கோடி நஷ்டப்பட்ட பிவிபி நிறுவனத்துக்கு, ஒப்பந்தப்படி பத்து கோடி பணத்தை செல்வராகவன் கொடுக்க வேண்டும்.

அதற்கு ஈடாகவே சிம்பு நடிக்கும் படத்தை இயக்கித் தருவதாக சொல்லி இருந்தாராம்.

இந்நிலையில், “நீங்கள் கொடுக்க வேண்டிய பத்து கோடியை முதலில் பைசல் பண்ணுங்கள். பிறகு படம் ஆரம்பிக்கலாம்” என்று செல்வராகவனிடம் உறுதியாக சொல்லி விட்டார்களாம் பிவிபி நிறுவனத்தினர்.

தான் கொடுக்க வேண்டிய பத்து கோடியை கொடுத்தால் மட்டுமே அடுத்த படத்தை தொடங்க முடியும் என்கிற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் செல்வராகவன்.

எனவே, அடுத்த முயற்சியாக, ‘வாய் மூடி பேசவும்’ படத்தை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா படநிறுவனத்தை அணுகி இருக்கிறார்.

ஒருசில சந்திப்புகளுக்குப் பிறகு ரேடியன்ஸ் மீடியாவுக்கு அடுத்தப்படம் பண்ணுகிறேன் என்று செல்வராகவன் சொல்ல ஆரம்பிக்க…

ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான வருண் மணியனோ,

“செல்வராகவன் , ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கியபோது அவருக்கும் அந்த படத்தைத் தயாரித்த பிவிபி நிறுவனத்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அவர் சரி செய்தால்தான், அவர் இயக்கும் புதிய படத்தை நான் தயாரிப்பேன். இல்லை என்றால் நான் தயாரிக்க வாய்ப்பில்லை”

என்று அறிவித்திருக்கிறார் வருண்மணியன்.

ஆக…சிம்பு – செல்வராகவன் கூட்டணி கை கோர்க்கும் படம் இப்போதைக்கு இல்லை என்பதே இறுதி நிலவரம்!

கையை பிசைந்து கொண்டு நிற்கிறார் செல்வராகவன்.

பொறுப்பற்ற இயக்குநர்களுக்கு செல்வராகவனுக்கு ஏற்பட்ட கதி ஒரு பாடம்…