திருநங்கையை தங்கையாக பாவித்த விஜய்சேதுபதி…

684

திரைப்பட இயக்குநர்கள் பலருக்கும் சமூகம் குறித்த பார்வையும் இல்லை.. அக்கறையும் இல்லை.

அதனால்தான் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களை எல்லாம் திரைப்படங்களில் கதையாகவும், காட்சிகளாகவும், வசனங்களாகவும், பாடல்களாகவும் வைக்க அவர்கள் தயங்குவதே இல்லை.

இயக்குநர் சீனுராமசாமி இந்த ரகத்தை சேர்ந்த இயக்குநர் அல்ல.

அடிப்படையில் மனிதநேயமிக்க  மனிதன்.

Stills (3)

அதை அப்படியே திரைக்குக் கொண்டு சென்றுவிட துடித்துக் கொண்டிருக்கும் படைப்பாளி.

அதனால்தான், சீனுராமசாமியின் திரைப்படங்களில் சமூகத்தை செப்பனிடத் தேவையான விஷயங்கள் நிறைந்து கிடக்கும்.

அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் கூட அற்புதமான ஒரு விஷயத்தை செய்திருப்பார்.

கிராமத்தில் 30 ரூவா டாக்டராக பணியாற்றும் விஜய்சேதுபதி தன் மருத்துவமனையில் ஒரு திருநங்கைக்கு வேலை கொடுப்பார்.

கூடையில கருவாடு என்று காலம்காலமாக திருநங்கைகளை இழிவு செய்து வரும் தமிழ்சினிமாக்களில் இருந்து மாறுபட்டு  திருநங்கையை சக மனுஷியாக பார்த்த இயக்குநர் சீனு ராமசாமி.

அவரது இந்த முடிவுக்கு குறுக்கே நிற்காமல் திருநங்கையை தன்னோடு இணைந்து நடிக்க இசைவு தந்த விஜய்சேதுபதியும் பாராட்டுக்குரியவர்.

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக பின்னர் விஜய்சேதுபதியின் மருத்துவமனை ஊழியராக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்றவர்..  திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா.

தர்மதுரை படத்தில் நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்…

“என் சொந்த ஊர் சிவகாசி, நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.

கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போட் போட்டோக்களை கொடுத்து இருக்கிறேன்.

வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்துக்கொண்டே நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் புதியபூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு. பின்பு நிறைய இடங்களில் மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன்.

அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன்.

நான் எதிர்பார்க்கவே இல்லை, இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.

என் அண்ணணாகவே மாறி விஜய்சேதுபதி  என்னை ஊக்கப்படுத்தினார்.

இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த தீபாவளி வந்தால் என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது.

ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர்.. எனக்கு கண்ணீர் வந்து விட்டது.

இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்துவிட்டேன். மேலும் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தீவிரமாய் நடித்து  வருகிறேன்.

என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் சீனுராமசாமி அவர்களுக்கு நன்றி.”