மீண்டும் படம் தயாரிக்கும் சத்யராஜ்

605

சமீபத்தில் வெளியான ‘ஜாக்சன் துரை’ திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் அள்ளிச் சென்றுள்ள நடிகர் சத்யராஜ் தற்போது புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத ‘கிட்னாப் – திரில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ‘நாதாம்பாள் பிலிம் பாக்டரி’ சார்பில் சத்யராஜ் தயாரித்து வருகிறார்.

அப்படி என்ன சிறப்பு இந்தப் படத்தில்…?

“இயக்குனர் கார்த்திக் என்னிடம் வந்து கதையை சொன்ன அடுத்த நொடியே, இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையானது என்னை கவர்ந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்த படத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார்.

ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நான் இந்த படத்தில் நடித்து வருகிறேன். தொகுப்பாளர்களும், எப் எம் வாடிக்கையாளர்களும் ஓயாமல் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதும், அதை நான் கண்காணிப்பதும், எனக்கு புதுவித அனுபவமாய் இருந்து வருகிறது.

இதுவரை நான் நடித்த கதாப்பத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த கதாப்பாத்திரம்  இருக்கும்..

புதுமையான கதாப்பாத்திரம், புதுமையான கதைக்களம் என எல்லா விதத்திலும் புதுமுக இயக்குனர்கள்  சிறப்பாக செயல்பட்டு வருவது மேலும் சிறப்பு. தொடர்ந்து புது முக இயக்குனர்களுடன் பணிபுரிவதை நான் பெரிதும் விரும்புகிறேன்..” என்கிறார் நடிகர் – தயாரிப்பாளர் சத்யராஜ்.

“இந்த படத்தின் கதையானது ஒரு ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்டு தான் நகரும். ஒரு ரேடியோ தொகுப்பாளருக்கும், கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் சுவராசியமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை கரு. சத்யராஜ் என்றாலே நையாண்டியான வசனங்கள் தான். அந்த வகையில், இந்த படத்தில் சத்யராஜின் நையாண்டியான வசனங்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கலாம்…’

என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக்.

சந்தோஷ் இசையமைப்பாளராகவும், ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.