தமிழிசை மிரட்டலுக்கு நடிகர் சத்யராஜ் நக்கல் பதில்…!

1577

தமிழ் உணர்வு கொண்ட திரைப்படக்கலைஞர்கள் இணைந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “தமிழ் நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

அரசியல் சாயம் எதுவுமின்றி போராடவும், கலை இலக்கிய பண்பாட்டினை காக்கவே இது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை காலியாக்கினால் உலகத்தின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும். தமிழர்களின் ஒற்றுமை உலகம் முழுக்க தெரியவரும்.

சூதாட்டம் ஆடிய சென்னை அணிக்கு உங்கள் ஆதரவு இருக்குமென்றால், விவசாயிகளுக்கு இருக்காதா?

ஐபிஎல் போட்டியை புறக்கணித்தால் உயிர் ஒன்றும் போகாது

எங்களுடைய போராட்டம் வேறுமாதிரியாக இருக்கும். என்ன மாதிரியான போராட்டம் என்பதை இப்போது சொல்ல மாட்டோம்.” என்று ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.

“உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. அப்புறம் எதற்கு சட்டம் இருக்கிறது? மாநிலம் முழுக்க சுற்றி வரும் ஆளுநர் இங்கு இருக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை” என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

“காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்; போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.” என்று தெரிவித்த நடிகர் சத்யராஜ். ஐடி ரெய்டு வந்தால் எப்படி பயப்படுவார்கள் என்று தெரியும் என்று தமிழிசை  தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்தார்.

“என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. அதனால் தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஐடி ரெய்டு வந்தால் எனக்கு கவலையில்லை. என்னிடம் எதுவும் தேறாது.” என்றார் சத்யராஜ்.