சிவகார்த்திகேயனை சந்தானம் வீழ்த்தத் துடிப்பது ஏன்?

why-is-santhanam-trying-to-defeat-sivakarthikeyan

352

சிவகார்த்திகேயனை சந்தானம் வீழ்த்தத் துடிப்பது ஏன்?
…………..………
ஜெ.பிஸ்மி

புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதை தமிழ்சினிமாவில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… நடிகர் சந்தானத்துக்கு 100 சதவிகிதம் பொருந்தும்.

பூனை – சந்தானம்.

புலி – சிவகார்த்திகேயன்.

சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு பொதுவான லட்சியம்… சினிமாவில் ஜெயிக்க வேண்டும். பேரும் புகழும் அடைய வேண்டும். கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும். கார், பங்களா என்று சொகுசாக வாழ வேண்டும்.

காமெடி நடிகர் சந்தானத்துக்கு இவை மட்டுமே லட்சியங்கள் இல்லை. இன்னொன்றும் உண்டு. என்ன லட்சியம் தெரியுமா? சிவகார்த்திகேயனை மிஞ்சவேண்டும் என்பதே அது.

இதென்ன விசித்திரமான லட்சியம்?

சிவகார்த்திகேயனின் உயரம் வேறு, அவரது பாதை வேறு, சந்தானத்தின் உயரமும், பாதையும் வேறு. சிவகார்த்திகேயனின் இன்றைய சம்பளம் 35 கோடி. சந்தானத்தின் சம்பளம் வெறும் 5 கோடி.

வணிகமதிப்பில் சிவகார்த்திகேயனைவிட பல மடங்கு பின்தங்கியிருக்கும் சந்தானம் ஏன் அவரை மிஞ்ச வேண்டும் என்று நினைக்கிறார்?

தமிழ்சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க, சிவகார்த்திகேயனை தன்னுடைய எல்லைக்கோடாக, இலக்காக சந்தானம் ஏன் நிர்ணயித்திருக்கிறார்?

இந்தக்கேள்விக்கு விடையைத்தேட முற்பட்டால், சந்தானத்துக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான பல வருடங்களுக்கு முந்தைய பழைய பகையை காரணமாக சொல்கிறார்கள் சந்தானத்துக்கு நெருக்கமானவர்கள்.

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்குமே தாய்வீடு விஜய் டிவிதான்.

ஒருபக்கம், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளராகவும், தொகுப்பாளராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

இன்னொரு பக்கம் சகலை Vs ரகளை, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சிகளில் கலக்கிக்கொண்டிருந்தார் சந்தானம். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே கவனஈர்ப்பைப் பெற்றிருந்த நேரம் அது.

பொதுவாகவே சிவகார்த்திகேயன் யாரைப்பற்றியும் சகட்டுமேனிக்கு கமெண்ட் அடிக்கிற இயல்பு கொண்டவர். அது சம்மந்தப்பட்டவரை நோகடிக்குமே என்றெல்லாம் யோசிக்காமல் லூஸ்டாக் விடுவார். சில வருடங்களுக்கு முன் கமல் ஹாசன், ஸ்ருதிஹாசன் பற்றி சிவகார்த்திகேயன் கமெண்ட் அடிக்க, அது மதுரையைச் சேர்ந்த தீவிர கமல் ரசிகர் ஒருவரை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி விட்டது. சிவகார்த்திகேயனுக்கு பாடம்கற்றுக்கொடுக்க காத்திருந்தவருக்கு, சில மாதங்களிலேயே அந்த சந்தர்ப்பம் வாய்த்தது. மதுரைக்கு சிவகார்த்திகேயன் வருவதை அறிந்து, ஏர்போர்ட்டுக்கே சென்ற அந்த ரசிகர் சிவகார்த்திகேனை வழிமறித்து தாக்கினார்.

தமிழ்சினிமாவின் லெஜண்ட் கமல்ஹாசனைப்பற்றியே கமெண்ட் அடித்த சிவகார்த்திகேயன் சந்தானத்தை மட்டும் விட்டுவைத்திருப்பாரா என்ன?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தானத்தைப் பற்றி சிவகார்த்திகேயன் நக்கலடித்ததை யாரோ சிலர் சந்தானத்திடம் போட்டுக்கொடுக்க… அன்று தொடங்கியது இருவருக்கும் இடையிலான பனிப்போர். சிவகார்த்திகேயனை தன்னுடைய எதிரியாகவே எண்ணத் தொடங்கினார் சந்தானம்.

ஆரம்பகாலத்தில் அண்ணாமலை என்ற மெகாத்தொடரில் நடித்த சந்தானம், வின் டிவியில் டீகடை பென்ச் என்ற நிகழ்ச்சியில் முகம்காட்டி பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவிக்கு வந்து ஊரறிந்த காமெடியனாக மாறினார்.

சின்னத்திரையில் காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை மன்மதன் (2004) படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிம்பு. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை, அறை எண் 305ல் கடவுள் (2008) என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சிம்புதேவன்.

ஷங்கரின் தயாரிப்பில் உருவான அந்தப்படம் தோல்வியடைந்தது. அதோடு ஹீரோ ஆசையை மூட்டைக்கட்டிவைத்துவிட்டு காமெடியனாக நடிப்பதில் கவனம் செலுத்தினார் சந்தானம். அவருடைய காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கத்தொடங்கியது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகேஓகே போன்ற படங்களின் வெற்றிக்கே சந்தானத்தின் காமெடிதான் காரணமாக அமைந்தது. அவருடைய காமெடிக்கு ரசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்டு, முன்னணி ஹீரோக்கள் பலரும் சந்தானத்தை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவிக்கும் அளவுக்கு சந்தானத்தின் கொடி உயரேப்பறந்தது. சந்தானத்தின் சம்பளமும் படத்துக்குப் படம் உயர்ந்து விண்ணைத்தொட்டது. சந்தானம் இருந்தால் நம் படமும் ஹிட்டாகும் என்ற நப்பாசையில் தான் நடித்த ஒரு படத்தில் காமெடியனாக நடிக்க முடியுமா என்று சந்தானத்துக்குத் தூதுவிட்டார் சிவகார்த்திகேயன். அவர் மீதான் கடுப்பைக் காட்டிக்கொள்ளாத சந்தானம், வேறு காரணத்தைச் சொல்லி அவருடன் நடிக்க மறுத்தார்.

இந்தநிலையில்தான் இனி காமெடியனாக நடிப்பதில்லை, ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்தார் சந்தானம்.

அவரது இந்த முடிவுக்குக் காரணமே…. சிவகார்த்திகேயன்தான்.

சந்தானம் சினிமாவுக்கு வந்தது 2004ல். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2012ல்தான் மெரீனா படத்தின் மூலம் சினிமாவில் முகம் காட்டினார் சிவகார்த்திகேயன். ஆனாலும் மெரினா, மனம் கொத்திப்பறவை, கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். மனம் கொத்திப்பறவை படம் தவிர மற்ற படங்கள் எல்லாம் ஹிட். இமானின் ஊதாக்கலரு ரிப்பன் புண்ணியத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர்டூப்பர் ஹிட்.

இடையில் தனுஷ் நடித்த 3 படத்தில் மட்டும் காமெடியனாக நடித்தார் சிவகார்த்திகேயன். சொல்லப்போனால் இந்தப்படம்தான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கக் காரணமாகி வெற்றிவாசலை அவருக்கு விரியத் திறந்துவிட்டது.

இந்த இடத்தில் சின்ன ப்ளாஷ்பேக்.

தனுஷ் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காமெடியன் வேடத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சந்தானம்தான். கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸும் வாங்கிவிட்டு படப்பிடிப்புக்கு சிலநாட்கள் இருந்தநிலையில் அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சந்தானம்.

என்ன காரணம் தெரியுமா?

அப்போது சிம்புவுக்கும் தனுஷுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. மன்மதன் படத்தில் தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதால் சிம்புவின் விசுவாசியாக இருந்தார் சந்தானம். தன்னுடைய எதிரியான தனுஷ் உடன் 3 படத்தில் சந்தானம் நடிப்பதை சிம்பு விரும்பவில்லை. அதனால் 3 படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சந்தானம்.

அதன் பிறகே, அவரைப்போலவே விஜய் டிவியில் காமெடியனாக புகழ்பெற்றிருந்த சிவகார்த்திகேயனை தேடிப்பிடித்து 3 படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப்படத்தில் தன்னைவிட சிவகார்த்திகேயனுக்கு கைதட்டல் அதிகம் கிடைத்ததை கவனித்து, தன்னுடைய பேனரிலேயே அவரை கதாநாயகனாக்கி எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தயாரித்தார். ஆக.. சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒருவகையில் சந்தானமே காரணமாகிப்போனதுதான் சுவாரஸ்யமான வேடிக்கை.

தான் நடிக்க மறுத்த 3 என்ற படமே, தன்னுடைய எதிரியின் வளர்ச்சிக்கு காரணமாகி விட்டதே என்று சந்தானம் ஒருபக்கம் மனசுக்குள் மருகிப்போனாலும் இன்னொரு பக்கம் நாமும் கதாநாயகனாகிவிட வேண்டும் என்று துடித்தார். அவருடைய நினைப்பு தவறில்லை. காலம் முழுக்க ஒருவர் காமெடியனாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்தகாலங்களில் கூட பல காமெடியன்கள் கதாநாயகன்களாக நடித்து வெற்றியடைந்துள்ளனர். சினிமாவில் அடுத்தக்கட்டத்தை அடைய வேண்டும் என்கிற எண்ணம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் ஹீரோவாகி சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிவிட வேண்டும் என்று சந்தானம் நினைத்ததுதான் தவறு. இந்த எண்ணம்தான் சந்தானத்தை தடம் பிறழ வைத்தது.

கதாநாயகனாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்த சந்தானம் ஆரம்பத்தில், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட – காமெடி ஓரியண்டட்– படங்களில் நடித்தார். இன்றுபோய் நாளை வா படத்தை உல்டா பண்ணி எடுக்கப்பட்ட இந்தப்படம் ஓரளவு வசூலைக்கொடுத்ததும், சந்தானத்துக்கு தலைகால் புரியவில்லை.

ரசிகர்கள் தன்னிடம் காமெடியை மட்டுமே விரும்புகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தன்னை விஜய், அஜித் ரேன்ஜ் ஹீரோவாக கற்பனை செய்து கொண்டதோடு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சக்கப்போடு போடுராஜா என ஹீரோயிசப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். வெளிப் பார்வைக்கு இவர் ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்படுகிறாரோ என்றொரு தோற்றம் இருந்தாலும் உண்மையில் சந்தானத்தின் டார்கெட் சிவகார்த்திகேயன்தான். நம்மைப் போலவே விஜய் டிவியிலிருந்து வந்த, நம்மைப் போலவே காமெடியனாக இருந்த சிவகார்த்திகேயன் ஹீரோயிசப்படங்களில் நடிக்கும்போது நாம் நடித்தால் என்ன? என்ற எண்ணம் அவரை பாடாய்படுத்தியது.

சந்தானத்தைப்போலவே சிவகார்த்திகேயனும் காமெடியன்தான் என்றாலும், காலப்போக்கில் மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால் சந்தானத்தை மக்கள் ஹீரோவாக இன்னமும் ஏற்கவில்லை. இதுவரை அவர் ஹீரோவாக நடித்த 14 படங்களில், காமெடி தூக்கலாக இருந்த தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே வணிகரீதியில் வெற்றியடைந்திருக்கின்றன. சபாபதி, குலுகுலு ஆகிய படங்கள் அட்டர்ப்ளாப். அதிலும் குறிப்பாக, அண்மையில் வெளியான குலுகுலு படத்தின் ரிலீஸின்போது மீடியாக்களுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்குக்கூட இன்னும் பணம் செட்டில் பண்ணப்படவில்லை. குலுகுலு படத்தின் படு தோல்வியால் கடனை சமாளிக்க முடியாமல் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தலைமறைவாகிவிட்டதாக படத்துறையில் தகவல் அடிபடுகிறது.

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களின் தலைஎழுத்து இப்படி என்றால், அவர் நடித்த சர்வர் சுந்தரம் என்ற படமோ பல வருடங்களாக வெளிவராமலே முடங்கிக்கிடக்கிறது. இதுவரை பலமுறை ரிலீஸ் தேதி அறிவிப்பட்டும்கூட இந்தப் படம் திரைக்குவரவில்லை. இதேபோல், ஏஜன்ட் கண்ணாயிரம் என்ற படமும் வருடக்கணக்கில் தயாரிப்பில் இருக்கிறது.

சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து மண்ணைக்கவ்வி வருவதால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலோ என்னவோ சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு பெரும்பாலும் அவரேதான் தயாரிப்பாளர். அல்லது தன்னுடைய நண்பர்களையே தயாரிப்பாளராக்கி, சந்தானமே பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

இப்படியாக தன்னுடைய ஹீரோ அந்தஸ்த்து அதளபாதாளத்துக்கு சென்றுவிடாமல் முட்டுக்கொடுத்து வரும் சந்தானம், சிவகார்த்திகேயனை வீழ்த்த நினைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

……………………….

ஜெ.பிஸ்மி
பின் குறிப்பு – குமுதம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை