சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோயா…? – புதுப்படங்களை தவிர்க்கும் பின்னணி இதுதானா?

757

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதுதான் சினிமா நட்சத்திரங்களின் தாரக மந்திரம்.

மார்க்கெட் இருக்கும் வரைதான் சினிமா உலகத்தில் மதிப்பும்.. மரியாதையும்…

எனவே லைம்லைட்டில் இருக்கும்போதே முடிந்தவரை பணத்தை சேர்த்துவிடுவார்கள் நட்சத்திரங்கள்.

இதற்கு மாறாக, மார்கெட் உச்சத்தில் இருக்கும்போதே… படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஓய்வு எடுப்பதாக சொன்னால்… அதுவும் ஒரு நடிகை சொன்னால்…. அதற்கு பின்னால் உள்ள காரணத்தை அவசியம் ஆராய்ந்தே தீர வேண்டும்.

ஏனெனில், இளமை இருக்கும் வரைதான் கதாநாயகிகளின் வண்டி ஓடும்.

அதன் பிறகு அக்கா… அண்ணி…. அம்மா கேரக்டர் என்று டிவிசீரியலுக்கு அழுவதற்குப் போக வேண்டியதுதான்.

யதார்த்தம் இப்படி இருக்க, “ கொஞ்ச நாட்களுக்கு இனி புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்று ட்வீட் செய்துள்ளார் சமந்தா.

இவரது நடிப்பில் சமீபத்தில்  ‘தெறி’ மற்றும் ‘24’ படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி உள்ளன.

இப்படங்களை தொடர்ந்து பிவிபி சினிமாஸ் தயாரிப்பான ‘பிரம்மோத்ஸவம்’, ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துள்ள ‘ஜனதா கரேஜ்’ ஆகிய தெலுங்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன.
தெறி, 24, பிரம்மோத்ஸவம், ஜனதா கரேஜ் என  நான்கு படங்களிலும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தாராம் சமந்தா.

அப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் தற்போது நடிப்புக்கு ஒரு பிரேக் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

‘‘இப்போது நிம்மதியாக தூங்குகிறேன். நான் நடித்து வந்த சில படங்களின் வேலைகள் முடிந்து அப்படங்கள் வெளிவந்து விட்டன! கடந்த எட்டு மாதங்கள் கடுமையாக இருந்தது.
களப்படைந்து சோர்ந்துபோனாலும் அதையெல்லாம் தாண்டி வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!  எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் என் குடும்பத்தினருக்கு நன்றி! நான் சிறந்த மகளாகவோ, தோழியாகவோ இருந்ததில்லை. இனி சற்று நிதானத்துடன் போக முடிவு செய்துள்ளேன். அதனால் சில காலங்களுக்கு இனி புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த திடீர் அறிவிப்பு மேலோட்டமாகப் பார்க்கும்போது நம்பும்படி இருந்தாலும், அதன் பின்னணியில் இன்னொரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது, சமந்தாவுக்கு சோரியாஸிஸ் என்ற தோல் நோய் உள்ளது. இந்த நோய் காரணமாகவே ஐ, மற்றும் கடல் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில் அப்படங்களிலிருந்து விலகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சோரியாஸிஸ் என்ற இந்த சரும நோய் கோடை காலத்தில் தீவிரமாக உடம்பில் பரவக்கூடிய தன்மை கொண்டது.

தற்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திராவிலும் கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் சமந்தாவின் சருமத்தை சோரியாஸிஸ் நோய் பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாம்.

இது வெளியே தெரிந்தால் தன்னுடைய கேரியருக்கு மட்டுமின்றி இமேஜுக்கும் நல்லதல்ல என்பதால் கோடை வெப்பம் தணிகிறவரை படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுக்க இருக்கிறாராம்.