சாகசம் படத்துக்கு வந்த சத்திய சோதனை…

884

சாகசம் என்ற தமிழ்ச்சொல்லுக்கே நியுமராலஜி வைத்தியம் பார்த்து சாஹசம் என்று மாற்றி தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்தார் பிரசாந்தின் அப்பா தியாகராஜன்.

பிரசாந்த் என்ற பெயரை பிரஷாந்த் என்று மாற்றிய பிறகுதான் அவருக்கு மார்க்கெட்டே போனது என்பதை மறக்காமல் இருந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார்.

சாகசம் என்ற வார்த்தையை சாஹசம் என்று மாற்றினாலும் அந்தப் படத்துக்கு நன்மை எதுவும் விளைந்துவிடவில்லை.

மாறாக, சிக்கல்தான் ஏற்பட்டது.

ஏறக்குறைய மூன்று வருடங்களாக ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது சாஹசம்.

ஒருவழியாக படத்தை முடித்து வெளியிட ஆயத்தமானபோது படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

சொந்தமாக ரிலீஸ் செய்யலாம் என்றால், தியேட்டர்களின் கதவு திறக்கப்படவில்லை.

வேறுவழியில்லாமல், தேனாண்டாள் பிலிம்சில் சரண் அடைந்தனர்.

முன்னணி நட்சத்திரங்களின் படத்தை வெளியிட்டு நாலு காசு பார்த்து வரும் நேரத்தில் பிரசாந்த் நடித்த படத்தை வெளியிட்டால் வேலைக்கு ஆகாது என்று தேனாண்டாள் பிலிம்ஸ் தயங்க…

கடைசியில் தியேட்டர் எடுத்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது தேனாண்டாள் பிலிம்ஸ்.

அதாவது சாஹசம் படத்தை வாங்கவோ வெளியிடவோ முன்வராமல் அந்தப் படம் வெளியாக உதவி மட்டும் செய்வதாக சொன்னது.

அதையடுத்து, தேனாண்டாள் பிலிம்ஸ் சாகசம் படத்தை வாங்கி வெளியிடுவதுபோல் விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தனர்.

அதுவே சாகசம் படத்துக்கு ஆபத்தாகிவிட்டது.

வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தால் சாஹசம் என்ற பெயர் தமிழ்ச்சொல் இல்லை என்று சொல்லி விண்ணப்பத்தை நிராகரிக்கத் தயாராக இருந்தது வரிவிலக்கு அளிக்கும் வணிகவரித்துறை.

இதை எந்த புல்லுருவியோ தியாகராஜன் காதில் போட, உஷாரான தியாகராஜன் சாஹசம் என்ற பெயரை சாகசம் என்று மாற்றி வரிவிலக்குக்கு விண்ணப்பம் அனுப்பினார்.
அப்படியும் ரிஜக்ட் பண்ணிவிட்டனர்.

தேனாண்டாள் பிலிம்ஸுக்காக சாகசம் படத்துக்கு தியேட்டர் தர சம்மதித்தவர்கள் இப்போது வரிவிலக்கு கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் தியேட்டர் தர மறுத்துவிட்டனர்.

எனவே 100க்கும் குறைவான தியேட்டர்களில் பெயரளவுக்குத்தான் வெளியாகிறது சாகசம்.