பட நிறுவனத்தில் பரமரகசியமாக நடந்த பாகப்பிரிவினை…!

799

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் 3 ஆம் பாகமான எஸ் 3 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது.

எஸ் 3 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கைப் பார்த்தவர்களுக்கு அதில் இடம்பெற்றுள்ள படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் குழப்பத்தைக் கொடுத்திருக்கிறது.

எஸ்-3 படத்தின் விளம்பரத்தில், ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா வழங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜாவும், ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து எஸ்-3 படத்தை தயாரிக்கின்றனவாம்.

சரி… ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் யாருடையது?

சிரிக்காதீர்கள்…. ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புதிய நிறுவனத்தின் பெயர்தான் அது.

சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை தயாரித்ததன் மூலம் படத்தயாரிப்பில் நுழைந்த ஸ்டுடியோ கிரீன், ஏகப்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறது. பல படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனத்தின் அதிகாரபூர்வமான தயாரிப்பாளராக கே.இ,ஞானவேல்ராஜா இருந்தாலும், அந்நிறுவனத்தில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சூர்யாவின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் ஆகியோரும் பங்குதாரர்கள்.

ஐந்து பேருடைய முதலீடு இருந்தாலும், ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனத்தை இவ்வளவு பெரிய நிறுவனமாக கட்டமைத்தது மட்டுமல்ல, கரன்ஸி கொட்டும் கம்பெனியாகவும் மாற்றியது ஞானவேல்ராஜாவின் திறமை மற்றும் உழைப்புதான் என்பதை திரையுலகம் அறியும்.

அப்பேற்பட்ட வளர்ச்சியையும்… லாபத்தையும் காட்டிய பிறகும் ஞானவேல்ராஜா மீது சூர்யா பிரதர்ஸுக்கு என்னவோ வருத்தம்.

அந்த வருத்தம் விஸ்வரூபம் எடுத்து வெளியே தெரிவதற்குள் நாலு சுவற்றுக்குள் பேசி முடித்து ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார் சூர்யா.

அங்கிருந்து விலகிய கையோடு 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற சொந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கினார். இதில் அவரே முதலாளி.

அடுத்து, சூர்யாவின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் இருவரும் தனியாக சென்று பொட்டென்ஷியல் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தைத் தொடங்கிவிட்டனர்.

அவர்களின் தயாரிப்புதான் மாயா படம்.

இது தவிர, ட்ரீம் வாரியர்ஸ் என்ற நிறுவனத்திலும் இருவரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலிருந்து விரைவில் ஞானவேல்ராஜாவும் வெளியேற இருப்பதாக தகவல்.

அதன் காரணமாகவே அவவர் தனக்காக தொடங்கிய புதிய நிறுவனம்தான் -ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்.

அப்படி என்றால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் யாருக்கு சொந்தம்?

தற்போதைய நிலவரப்படி அந்த நிறுவனத்தை நடிகர் கார்த்தி அண்டர்டேக் பண்ணப்போவதாக தகவல் அடிபடுகிறது.