சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி… வேடிக்கைப் பார்க்கும் நடிகர் சங்கம்….

1247

சிவகார்த்திகேயனுக்கும்… 24 AM STUDIOS  தயாரிப்பாளரும் சிவகாரத்திகேயனின் நண்பருமான ஆர்.டி.ராஜாவுக்கும் ரெமோ ரிலீஸுக்கு முந்தைய நாள் பிரச்சனை.

சிவகார்த்திகேயனின் மனைவி கணக்கு கேட்டதால் நட்பு முறிந்தது.

ரெமோ படம் 8 கோடி ரூபாய் டெபிஸீட்டில் ரிலீஸ் ஆகியிருக்கிறது…

ஏ.எம்.ரத்னம் 8 கோடி கொடுத்ததால்தான் படமே ரிலீஸ் ஆனது. இல்லை என்றால் ரெமோ படமும் ரஜினி முருகன் படம் போல் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் போயிருக்கும்…

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே  குறைவான வசூல் இந்தப்படத்துக்குத்தான்…

– என ரெமோ படம் குறித்து செய்திகளும்… வதந்திகளும் காதுக்கு வந்து கொண்டே இருக்க….

இந்த தகவல்களுக்கு மாறாக ‘ரெமோ’ படம் கடந்த வாரம் வெளியானது. தற்போது வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக ஒரு படம் ஓடவில்லை என்றால்…. அந்தப் படத்தை வெற்றிப்படம்போல் காட்டுவதற்காக சக்சஸ்மீட் வைப்பார்கள்.

ரெமோ படத்துக்கோ சக்சஸ் மீட் வைக்காமல், அப்படத்தை வெற்றிபெற வைத்த மீடியாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் ரெமோ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசை அமைப்பாளர் அனிருத், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்கம்போல் எல்லோரும் சிவாபுராணம் பாடியதைத் தொடர்ந்து பேச வந்தார் சிவகார்த்திகேயன்…

‘‘இந்தப்படத்தில் கதாநாயகனாக என்னை  நடிக்க வைத்த பாக்யராஜ் கண்ணனுக்கு நன்றி! நான் அழகாக இருக்கிறேன் என்று என்னை உணர வைத்தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமை. நான் லேடி கெட்டப்பில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷ் பல உதவிகள் செய்தார். அது மறக்க முடியாது.”

என்று ரெமோ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் சம்பிரதாயமாக பேசிக் கொண்டே வந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா பற்றி குறிப்பிடும்போது குமுறித்தள்ளிவிட்டார்….

“இந்தப்படத்திற்காக அதிகமாக உழைத்தவர் அவர்தான். கடின உழைப்பாளி. நான் 18 மணிநேரம் வேலை பார்த்து விட்டு வீடு திரும்புவேன். என் குடும்பத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படம் துவங்கிய நாளிலிருந்து ராஜா வீட்டுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து வேலை பார்ப்பார். அவர் குடும்பத்தினருடன் பேசி பல நாட்கள் இருக்கும். இப்படி வேலை செய்யும் இவரை பலர் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை. ஆனால், எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை’’ என்று கண்கலங்கினார் சிவகார்த்திகேயன்.

“எங்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்காமல் தொடர்ந்து சொந்தப்படத்திலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்” என்று சில தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்ததோடு, மோகன்ராஜா இயக்கும் படத்தை தொடங்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவருவதாகவும் சில வாரங்களுக்கு முன் ஒரு தகவல் வெளியானது.

அது குறித்தே மீடியாக்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயன் பொங்கியதை புரிந்துகொள்ள முடிந்தது.

சக நடிகர் ஒருவர், சில தயாரிப்பாளர்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டு ஏறக்குறைய மிரட்டப்பட்டிருக்கிறார். இதெல்லாம் தெரிந்தும் நடிகர் சங்க நிர்வாகிகள் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், என்ன அர்த்தம்?