ரெமோ 8 கோடி… வேலைக்காரன் 16 கோடி… – இரண்டு மடங்கு விலை கொடுத்த விஜய் டிவி

941

‘ரெமோ’ படத்தை தொடர்ந்து ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த வருடம் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் மாதம் 29 -ஆம் தேதி வெளியாகவிருப்பதால் தற்போது இந்த படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

‘தனி ஒருவன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகும் படம்…

‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம்…

அனிருத் இசை அமைத்துள்ள படம்…

இதை எல்லாம் காரணம் காட்டி வேலைக்காரன் படத்தை பெரிய விலைக்கு விற்க திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் ‘பணக்காரன்’ ஆக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம்.

சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை தமிழக தியேட்டரிகள் ரைட்ஸ் மூலமாக மட்டும் 75 கோடியை அள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏரியாக்களின் விலையை நிர்ணயம் செய்துள்ளனர்.

இதற்கிடையில்தான் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி. நிறுவனம் வாங்கியுள்ளது.

சிவகார்த்திகேயனை வளர்த்து ஆளாக்கியது விஜய் டிவிதான்.

அந்த நன்றியை மறக்காமல் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவருடையை நன்றி உணர்ச்சியை பணமாக்கும் முயற்சியாக சிவகார்த்திகேயனை அடிக்கடி சிறப்பு விருந்தினராக அழைத்து தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு கூட்டத்தையும், டி.ஆர்.பி ரேட்டிங்கையும் கூட்டி வருகிறது விஜய் டிவி.

இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி.நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த தகவலை விஜய் டிவியே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் அந்த அறிக்கையில் இல்லை.

அதனால் என்ன?

நாம் விசாரித்துவிட்டோம்.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை 16 கோடிக்கு வாங்கியிருக்கிறது விஜய் டிவி.

முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களின் சாட்டிலைட் ரைட்ஸையே டிவி சேனல்கள் வாங்க மறுத்து வரும் தற்போதைய சூழலில் வேலைக்காரன் படத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய தொகை.

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை 5.5 கோடிக்குத்தான் ஜீ டிவி வாங்கியது.

ரெமோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவி 8 கோடிக்குத்தான் வாங்கியது.

தற்போது வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை இரண்டு மடங்கு விலை கொடுத்து 16 கோடிக்கு விஜய் டிவி வாங்கியிருப்பது பற்றி சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கான பின்னணியை அறியும் முயற்சியில் போட்டி சேனல் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

– ஜெ.பிஸ்மி