ரீங்காரம்.. – புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதை

626

ஹரி இயக்கிய ‘சேவல்’ படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’

படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர், மூர்த்தி, ‘அரசு’சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர்.

பாலா என்கிற புது முகம் நாயகன். பிரியாங்கா நாயகி. கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர். ஜெயபாலன் இருட்டில் வாழும் ‘ஆடுகளம்’ பூதமாக வித்தியாச வேடம் தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

“இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.” என்று சொல்லும் இயக்குநரிடம் படத்தின் கதை பற்றிக் கேட்டோம்…

“இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். கோணங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டியிருக்கிறேன். மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டுவிதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனால் இதை புதுசு என்று சொல்லமாட்டேன்.

எல்லா சொற்களும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்கிற வாய்கள் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும்வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப்படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ‘ரீங்காரம்’ “என்கிறார்.

ஒளிப்பதிவு இனியன் ஹரிஸ். இவர் சமுத்திரக்கனி நடித்த ‘புத்தனின் சிரிப்பு’ படத்தின் ஒளிப்பதிவாளர்

இசை… அலிமிர்ஷா. இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள்தான் . ஒன்றை ‘குட்டிப்புலி’ ‘அருவா மீச’ புகழ் பத்மலதா பாடியுள்ளார்.

இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்கள்.