‘காலா’வை கைப்பற்றத் துடிக்கும் விஐபி – 2 விநியோகஸ்தர்கள்…..

1142

படம் வெற்றியடைந்தால் தான் மட்டுமே லாபத்தை அறுவடை செய்வதும்… நஷ்டம் அடைந்தால், படத்தின் தயாரிப்பாளரின் கழுத்தில் துண்டைப்போட்டு நஷ்டஈடு கேட்பதும் விநியோகஸ்தர்களின் தொழில்தர்மமாகவே மாறிவிட்டது.

“நம்முடைய படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்கள் வயிறு எரிந்து சாபம் கொடுத்துவிடக்கூடாது” என்கிற நல்லெண்ணத்தில் பாபா படத்தின்போது ரஜினி ஆரம்பித்து வைத்த இந்த ‘திருப்பிக் கொடுக்கும் திட்டம்’ விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் பல பேரை பல சந்தர்ப்பங்களில் பதம் பார்த்தது.

லிங்காவில் ரஜினியையும் பதம்பார்த்தது.

இப்போது தனுஷை நோக்கி திரும்பி இருக்கிறது.

அதாவது, தன்னுடைய மாமனார் ரஜினியை வைத்து தனுஷ் தயாரித்து வரும் காலா படத்தின் மீது கண் வைத்துவிட்டனர் விஐபி – 2 படத்தின் விநியோகஸ்தர்கள்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த விஐபி-2 படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

தனுஷுக்கு 12 கோடி சம்பளம், படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி 20 கோடி … ஆக மொத்தம் 32 கோடியில் விஐபி-2 படத்தை எடுத்து தாணுவிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தஅடிப்படையில் விஐபி-2 படத்தை எடுத்துக் கொடுத்தார் தனுஷ்.

இந்த ஒப்பந்தத்தின்படி தனக்கு வர வேண்டிய சம்பளம் 10 கோடி சம்பளமே இன்னும் வரவில்லை என்று தனுஷ் தரப்பு புலம்பிக் கொண்டிருக்க, அதைவிட பேரதிர்ச்சியாய் இன்னொரு தகவல் வந்து சேர… அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது தனுஷ் தரப்பு.

அதாவது, வி.ஐ.பி. – 2 படத்தின் மதுரை ஏரியாவை வாங்கிய ராக்போர்ட் முருகானந்தம் என்பவர், தனுஷ் தரப்பை அண்மையில் தொடர்புகொண்டிருக்கிறார்.

விஐபி-2 படத்தின் மதுரை ஏரியாவை 5 கோடிக்கு வாங்கியதாகவும் ஒன்றரை கோடி ரூபாய்கூட படம் கலெக்ட் பண்ணவில்லை என்றும் சொன்ன முருகானந்தம், தனக்கு ஏற்பட்ட மூன்றரை கோடி நஷ்டத்துக்கு ஈடாக தற்போது நீங்கள் தயாரித்து வரும் காலா படத்தை தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

“உங்களிடம் விஐபி-2 படத்தை வியாபாரம் செய்தது நாங்கள் அல்ல, தாணுதான். எனவே இந்த விஷயத்தை அவரிடமே பேசிக்கொள்ளுங்கள். அவர் நஷ்டஈடு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்களாச்சு… அவராச்சு” என்று தனுஷ் தரப்பு பதில் சொல்ல, முருகானந்தம் டென்ஷனாகிவிட்டாராம்.

“விஐபி-2 படத்தின் விளம்பரங்களில் வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரும் இருப்பதால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று சொல்ல, தொலைபேசி உரையாடல் கடைசியில் தகராறில் முடிந்திருக்கிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்…. செல்போனில் பேசிய இரண்டு தரப்புமே உரையாடலை பதிவு செய்ததுதான்.

இந்த உரையாடல் விஐபி – 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்ட் செய்யப்பட, மற்ற விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக காலா படத்தை கேட்க முடிவு செய்துள்ளனர்.

விஐபி-2 படத்தின் சேலம் ஏரியாவை வாங்கிய சிவா தனக்கு ஒன்றரை கோடி நஷ்டம் என்கிறாராம்.

அதேபோல், டி.கே ஏரியாவை எம்.ஜி.யில் வாங்கியவரும் இந்த கூட்டணியில் சேர, மொத்தம் நான்கு விநியோகஸ்தர்கள் காலாவை கைப்பற்றுவதற்காக கை கோர்த்திருக்கிறார்.

இதனால் தனுஷ் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

விவேகம் படம் 110 கோடிக்கும், மெர்சல் படம் 150 கோடிக்கும் பிசினஸ் செய்யப்பட்டுள்ள தகவலை அடுத்து காலா படத்தை சுமார் 300 கோடிக்கு பிசினஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

வி.ஐ.பி. -2 நஷ்டம் என்பதை சாக்காக வைத்து, யானையின் காதுக்குள் புகுந்த எறும்பாக, நான்கு விநியோகஸ்தர்கள் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

காலாவை விநியோகஸ்தர்கள் கைப்பற்றப்போகிறார்களா?

அவர்களிடமிருந்து ‘காலா’வை தனுஷ் எப்படி காப்பாற்றப்போகிறார்?

– ஜெ.பிஸ்மி