விளம்பரங்களை நம்பி படத்தை வாங்காதீர்கள்! – ரஜினி கொளுத்திப்போட்ட நெருப்புடா

600

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்து தொலைத்த நடிகர்கள் பலர்.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாக்காரர்களிடம் தொலைத்தவர் ரஜினி ஒருவர்தான்.
அவர் நடித்த படங்களை வாங்கி அதனால் நஷ்டம் அடைந்தவர்கள், ரஜினியிடமிருந்து நஷ்டஈடு என்ற பெயரில் வாங்கிய தொகை கொஞ்ச நஞ்சமல்ல.

கடைசியாக லிங்கா படத்தில் நஷ்டம் என்று அவரை அசிங்கப்படுத்தியதோடு பெரிய தொகையையும் அவரிடமிருந்து பிடுங்கினார்கள்.

கபாலி படத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் கூட ரஜினியிடம் பில்லைப் போட காத்திருக்கிறார்கள்.

இப்படியாக படத்துக்குப் படம், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடம் பெரும் தொகையை இழந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு இன்றைக்கு அருமையான சந்திர்ப்பம் கிடைத்தது.

விக்ரம் பிரபு தயாரித்து நடித்து நெருப்புடா படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவுக்கு ரஜினிதான் சிறப்பு விருந்தினர்.

அந்த விழாவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தனர்.

முக்கியமாக, ரஜினிக்கு தீராத தலைவலியாக இருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் வந்திருந்தனர்.

அதை கவனித்த ரஜினி தன்னுடைய பேச்சில் செமயாய் பன்ச் வைத்தார்…

“இங்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் வந்திருக்கிறார்கள்.

சின்ன படமோ, பெரிய படமோ அதன் தயாரிப்பாளர்கள் பலவிதமாக விளம்பரங்களை செய்வார்கள்!

அந்த விளம்பரங்களை மட்டும் நம்பி படத்தை வாங்காதீர்கள்!

இந்த படம் என்ன விலைக்கு வாங்கலாம், இது எவ்வளவு கலெக்ட பண்ணும் என்று ஓரளவுக்கு தெரிந்து வாங்கி வெளியிடுங்கள்!

அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டப்படாதீர்கள்!

இது ஆரோக்கியமான விஷயமும் இல்லை!

இது என் வேண்டுகோளாக வைக்கிறேன்.

சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் என எல்லாரும் சம்பாதிக்க வேண்டும்.
இந்த நோக்கத்தோடு எல்லோரும் செயல்பட வேண்டும்!’’

நெருப்புடா படவிழாவில் ரஜினி ஏன் இப்படி பேசினார் என்று புரியாமல் கலைந்தது கூட்டம்.

ரஜினி சொன்னது நெருப்புடா படத்துக்காக அல்ல என்பதும், இனிமேல் நஷ்டஈடு கேட்டு ஒரு பய என் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று ரஜினி எச்சரிக்கிறார் என்பதும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்!