ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…

rajinikanth-fans-meet-stills-016

பேட்டை படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் பணிகளில் பரபரப்பாக இருப்பதாக மீடியாக்களில் செய்திகள் அடிபட்டன.

அதை உறுதிப்படுத்துவதுபோல் சற்றுமுன் ரஜினியிடமிருந்து ஒரு அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அந் அறிக்கையில் ரஜினி என்ன சொல்லியிருக்கிறார்?

நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது.

அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம் மன்ற உறுப்பினர்களை நியமனம் மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போதே நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்று நான் தெளிவாக கூறி இருந்தேன்.

நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை, தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.

அப்படி இல்லாமல் மற்றவர்களைப்போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம்.

எண்ணங்கள் சரியானதாக இருந்தால்தான் அவரது செயல்பாடுகள் சரியாக இருக்கும். எனவே தவறான எண்ணம் உள்ளவர்களிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முதலில் நீங்கள் உங்கள் தாய் தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது. நான் சொல்லும் வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.

முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்தது என்றுதான் அர்த்தம்.

மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.

முப்பது நாற்பது வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே பதவியை பெறுவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் முழுத்தகுதி ஆகிவிடமுடியாது.

சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொதுமக்களுக்கு பொறுப்புகளை வழங்கி அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி பொதுமக்களுடன் மன்ற நிர்வாக பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல் கொடுத்த வேலையைச் செய்யாமல் துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமல் தடுத்து மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களை தான் மன்றத்திலிருந்து நீக்குகிறோம்.

நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்து இருப்பதில் அர்த்தமில்லை. ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கிய நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஊடகங்கள் மூலமாக நம்மைப்பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமில்லை. வீண் வதந்திகள் நமது நேரத்தை வீணடிக்க கூடாது. எல்லாருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி.

அதாவது ரஜினி மக்கள் மன்றத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது பூதாகரமாக ஊடகங்களில் செய்தியாகிவருகின்றன.

அதை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஜினியிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இந்த அறிக்கைக்கு ரஜினி ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

– ஜெ.பிஸ்மி