ரஜினி – முரட்டுக்காளையா? முட்டாதகாளையா?

1003

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர்.

அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை.

அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை.

நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார்.

தன் உறவினர் அனிருத்தை முன்னிறுத்துவதற்காக இளையராஜா இடத்தில் அனிருத்தை பார்க்கிறேன் என்கிறார்.

மலையை மடுவோடு ஒப்பிடுகிறார்.

திரைப்படத்தில் மக்களை போராட தூண்டுகிறார், தரையில் மக்கள் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார்.

போராடும் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்கிறார்.

நிராயுதபாணியாக இருந்த ஜே.என்.யூ.மாணவர்களை கொடூரமாக தாக்கியவர்களை கண்டிக்காமல், போராடும் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்.

45 – ஆண்டுகளாக பணம் சம்பாதிப்பதை குறிகோளாக கொண்ட இவர் பண மதிப்பிழப்பை வரவேற்கிறார்.

என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதறியாமல் உளறுகிறார்.

பொதுமக்களுக்கு துளியும் தொடர்பில்லாத தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், கராத்தே தியாகராஜன் போன்றோரை அரசியல் ஆலோசராக வைத்துள்ளார்.

தமிழனின் ஒரு துளி வேர்வைக்கு ஒரு தங்ககாசு தருவேன் என்கிறார், தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி எனது பூர்வீகம் என்கிறார்.

தமிழகத்தை தாண்டியவுடன் நான் மராட்டியன் நான் வாழ்ந்தது கர்நாடகத்தில் என்கிறார் தமிழகத்தை லாவகமாக தவிர்த்து விடுகிறார்.

காவேரி தண்ணிரை திறந்து விடக்கோரி கர்நாடகத்துக்கு எதிராக போராடினால் மௌன சாமியராகி விடுகிறார்.

நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு தராதே என பாரதிராஜா தலைமையில் திரையுலகம் போராடினால்.. அதை திசை திருப்ப..

மறுநாள் இவர் மட்டும் தனியாளாக உண்ணாவுரதம் இருக்கிறார்.

நலிந்த அல்லது சிறு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார்.

உழைப்பாளி படத்தை விஜயா- வாகினி கோடீஸ்வர கம்பெனிக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இத்தருணத்தில் பிரபல இயக்குனர் பீம்சிங்கின் மகனும் சிறந்த பிலிம் எடிட்டருமான பீ.லெனின் சிறு, குறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்காத ரஜினியை கண்டித்து இனிமேல் அவர் படத்துக்கு பணிபுரிய மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தார்.

தன்னுடைய திரைப்புகழை.. தன் ரசிகர்களின் உழைப்பை விசுவாசத்தை தன் சுயலாபத்துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்.

நூற்றுக்கணக்கான பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் திரையுலகத்திற்காக குரல் கொடுக்காதவர்.. ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர் தான் ரஜினி.

இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழும் இந்த முட்டாத காளையைத்தான் முரட்டுக்காளை என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என தங்களது பிழைப்புக்காக கூறிக்கொண்டு அலைகிறது ஒரு கூட்டம்.. நிலைகுலையப் போகிறது ரஜினியின் ஆட்டம்.

ரஜினிகாந்த் திரையுலகம் எனும் நிழல் உலகத்தில் தனது 100 வயதுவரை கூட நடிக்கலாம்,நாமும் ரசிக்கலாம்,ஆட்சேபனையில்லை.

நாடு எனும் தரையுலைகில் தலையெடுக்க அவர் இனி ஒரு ஜென்மம் எடுத்து வர வேண்டும்.

தலை உள்ளவர்கள் தலைவர்கள் ஆகிவிட முடியாது.

– காகிதம் ராஜன்