வெள்ளித் திரையிலிருந்து மீண்டும் சின்னத் திரைக்கு வந்த சமுத்திரக்கனி

740

பிரபல திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி சினிமாவில் புகழ்பெறுவதற்கு முன் சின்னத்திரையில்தான் பல தொடர்களை இயக்கி வந்தார்.

நாடோடிகள் படத்தின் வெற்றிக்குப் பிறகே வெள்ளித்திரையில் பிஸியானார்.

தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘காயிதம்’ மெகா தொடர் இவரது தயாரிப்புதான்.

எளிய மக்களின் வாழ்க்கையை இயல்பாக படம் பிடித்துக் காட்டும் ‘காயிதம்’ தொடருக்கு நேயர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளதால் 100 எபிஸோடுகளைக் கடந்து வெற்றிநடை போடுகிறது.

இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களான பார்வதிக்கும் ஜெகாவுக்கும் மேலும் பல சோதனைகள் வரும் வாரங்களில் உருவாகின்றன.

தனக்கு வேலை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் வசீகரனின் மகள் அபியுடன் பாசத்துடன் பழகுகிறாள் பார்வதி.

மனைவியை இழந்த வசீகரனுடன் நெருங்கிப் பழகுவதாக நெருக்கமானவர்களே சந்தேகப்பட, பார்வதி மனவேதனையில் தவிக்கிறாள்.

இந்த நேரத்தில் வசீகரனுக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க, அவனது அத்தை முடிவெடுக்கிறாள்.

திருமணத்தை வசீகரனும் அபியும் வெறுக்கவே, பார்வதி மீது அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. அவள் வசீகரனை திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நேரத்தில் மில்லில் நடக்கும் சில குளறுபடிகளைக் கண்டுபிடிக்கிறாள் பார்வதி.

இதனால் அவள் வாழ்க்கை மேலும் சிக்கலாகிறது. இந்த நேரத்தில் அபி காணாமல் போய்விடவே… அனலில் விழுந்த புழுவாகத் துடிக்கிறாள் பார்வதி.

நண்பன் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டதால் முருகையனிடம் அடிமையாக இருக்கிறான் ஜெகா.

அநியாயங்களைத் தட்டிக் கேட்டதால் ஜெகாவின் மனைவி ஜாக்குலினையும் அவனது அம்மாவையும் கடத்தி ஒளித்து வைக்கிறான் முருகையன்.

இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறும் ஜெகாவின் மனமும் உடலும் பாதிக்கப்படுகிறது.

ஜெகாவை ஏதாவது வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளி முடக்கிவிட முருகையன் முயற்சி செய்கிறான்.

இந்த நேரத்தில், ‘மகனே என்னைக் காப்பாற்று’ என்று ஜெகாவின் அம்மாவிடம் இருந்து அலறல் குரல் வருகிறது.

இதுதவிர காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த மச்சக்காளை – செண்பகம் வாழ்க்கையிலும் திடீர் சிக்கல் வருகிறது.

இதுபோன்ற பல திருப்பங்களுடன் பரபரப்பாக நகரும், ‘காயிதம்’ தொடரில் திவ்யா, பாண்டி, சஹானா, பாபூஸ், யோகினி, வசந்த் கோபிநாத், சுப்புலட்சுமி, ஆண்ட்ரூஸ், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சமுத்திரக்கனியின், ‘நாடோடிகள்’ வழங்கும், ’காயிதம்’ தொடரை புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு காணத் தவறாதீர்கள்.