அன்று தலைவா…. இன்று புலி? – விஜய்யை டென்ஷனாக்கிய தமிழக அரசின் அறிவிப்பு…

973

அரசியலுக்கு வரப்போவதாக விஜய் சீன் போட்டுக் கொண்டிருப்பதை அவரது ரசிகர்கள் விரும்பினாலும், ஆளும்கட்சி ரசிக்கவில்லை.

அதனால்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் விஜய்க்கு குட்டு வைத்து அவரை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது.

தலைவா படத்துக்கு ஏற்பட்ட தடங்கல்கள் தடைகள் நினைவிருக்கலாம்.

அப்படியும் விஜய் திருந்தவில்லை.

அவ்வப்போது அரசியலுக்கு வரப்போவதுபோல் உதார் காட்டிக்கொண்டே இருக்கிறார்.

அதற்கான ‘பலனை’யும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்?

அக்டோபர் 1 ஆம் தேதி விஜய் நடித்த புலி திரைப்படம் திரைக்கு வரவிருக்கும்நிலையில், தியேட்டர்களுக்கு செக் வைத்திருக்கிறது தமிழ அரசு.

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம் புலி படத்தை திரையிட உள்ள தியேட்டர்காரர்களுக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன்,

‘‘ஏழைகளின் பொழுதுபோக்காக உள்ள திரையரங்குகளில் 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அரசு சார்பில் திரையரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அறிவித்த 7 அம்மா திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்?’’ என கேள்விகளை எழுப்பினார்.

இப்படி ஒரு கேள்விக்காகவே காத்திருந்ததைப்போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்தார்…

“மாநகராட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகத்துடன் கூடிய திரையரங்குகளில் 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையும், மற்ற குளிர்சாதன திரையரங்குகளில் 10 ரூபாய்
முதல் 50 ரூபாய் வரையும், நகராட்சிகளில் 5 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், பேரூராட்சிகளில் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், கிராமங்களில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அரசு அறி வுறுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

அமைச்சரின் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் புலி படத்தை பலி கொடுப்பதற்கான ரகசிய திட்டம் ஏதாவது இருக்குமோ என்ற எண்ணத்தில், சற்றே கலக்கத்தில் இருக்கிறதாம் விஜய் தரப்பு.