மக்களுடன் எங்களை இணைக்கும் பாலம்…! – பத்திரிகையாளர்கள் பற்றி சிவகார்த்திகேயன் பேச்சு!

cinema

 சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் தீபாவளி மலரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு முன்னிலையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுகொண்டார்.

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் கவிதா, பி ஆர் ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு, ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் இயக்குநர் பொன்ராம், நடிகர் சிரிஷ், பாடலாசிரியர் உமாதேவி, இயக்குநர் தாமிரா, இயக்குநர்-ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தலைமையுரை வழங்கிய கலைப்புலி எஸ்.தாணு, “ நூறு பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தீபாவளி மலர் அடுத்தாண்டு ஆயிரம் பக்கங்களுடன் வெளிவரவேண்டும்” என்று வாழ்த்தினார்.

மலரைப் பெற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்,

“சினிமா பத்திரிகையாளர்கள்தான் எங்களையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலம். நீங்கள் சொல்லிதான் நாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று அறிந்துகொள்ள முடிகிறது.
எங்களது தவறுகளையும் நீங்கள்தான் சுட்டிக்காட்டுகின்றீர்கள். அதனால்தான் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிகிறது” என்று பேசினார்.

விழாவில் கலந்துகொண்ட குழந்தைகள் மட்டுமல்லாது தீபாவளிக் கொண்டாடும் அனைத்துக் குழந்தைகளையும் “பாதுகாப்பான தீபாவளியாக கொண்டாட வேண்டும்” என சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

ஒரு சங்கத்தின் தலைவராகப் பணியாற்றுவது எவ்வளவு கடினம் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது… சந்தாவுக்கான சங்கமாக இல்லாமல், சினிமா பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அறிந்து மகிழ்ச்சி..” என்று வாழ்த்தினார் மலரை வெளியிட்ட பி.சி.ஸ்ரீராம்.

தலைவர் உரையாற்றிய சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் கவிதா, “பெண் என்பதாலேயே என் மீது பல விமர்சனங்களும், கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.. அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல், சங்கத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் பெற்றுக் கொடுப்பதிலும் என்னால் ஆன முயற்சிகளைத் தொடர்ந்து செய்வேன்..” என்று கூறினார்.