பொங்கல் படங்களின் பட்ஜெட்டும்…. வசூலும்….

1188

பொங்கலுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கதகளி, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்கள் வெளியாகின.

இந்த நான்கு படங்களில் எது வெற்றி… எது தோல்வி என்பதை ரசிகர்கள் அறிய முடியாதபடி குழப்பம் நீடிக்கிறது.

காரணம்… ட்விட்டரில் வேண்டுமென்றே பொய்யான வசூல் விரங்களை திட்டமிட்டே சிலர் பரப்பி வருகின்றனர்.

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் இருப்பதை வைத்து சினிமாக்காரர்களிடம் பணம் வசூல் செய்து பிழைப்பு நடத்தி வரும் சிலர், பணம் வாங்கிக் கொண்டு வேண்டும் என்றே குறிப்பிட்ட படத்தின் வசூலை அதிகமாகக் குறிப்பிட்டு ட்வீட்டுகிறார்கள்.

அதை சம்மந்தப்பட்ட நடிகனின் ரசிகர்களும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், நடிகர்களின் ஆர்வக்கோளாறு ரசிகர்களும் அடிப்படை ஆதாரமே இல்லாத வசூல் விவரங்களை எல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட பொய்யான வசூல் விவரங்களை, அது பொய் என்று தெரிந்தும் சம்மந்தப்பட்ட நடிகரும், இயக்குநரும், அவர்களை சார்ந்தவர்களும் ரீட்வீட் செய்து, பொய்யை உண்மையாக்குகின்றனர்.

சரி.. உண்மையான நிலவரம் என்ன?

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் பட்ஜெட் 15 கோடி. இன்றைய தேதி வரை 50 சதவிகிதத்தைக் கூட வசூல் செய்யவில்லை.

ரஜினி முருகன் படத்தின் பட்ஜெட் 10 கோடிக்குள்தான். வட்டி குட்டி போட்டதில் 22 கோடி என்று கணக்கு சொல்கிறார்களாம்.

இந்தப் படமும் போட்ட பணத்தை எடுக்கவில்லை என்பதே உண்மை நிலவரம். 4 நாட்களில் 20 கோடியை வசூல் செய்துவிட்டதாக சொல்வது அடிப்படையற்ற தகவல் என்கிறது தயாரிப்பு தரப்பு.

கதகளி படத்தின் பட்ஜெட்டே 10 கோடிதான். 12.5 கோடிக்கு தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் விற்கப்பட்டதாம். விஷால் நடித்த படங்களில் மிகவும் குறைவான பட்ஜெட் என்பதால் கதகளியை வாங்கியவர்களுக்கு சின்னதாக லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

18 கோடி செலவு செய்து நண்பேன்டா படத்தை எடுத்து நஷ்டப்பட்ட உதயநிதி, கெத்து படத்தை எடுக்க செலவிட்டது வெறும் 8 கோடிதான்.

கெத்து படத்தின் மீது அவருக்கிருந்த அளவுக்குமீறிய நம்பிக்கை காரணமாக இந்தப் படத்துக்கு பப்ளிசிட்டியே தேவையில்லை… படம் பட்டையைக் கிளப்பும் என்று சொல்லி வந்தார்.

கடைசியில் கெத்து படத்துக்கு அதுவே மைனஸாகிவிட்டது. பொங்கல் படங்களில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கெத்துதான். குறைவாக வசூல் செய்த படமும் அதுதான்.

பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு அன்று அரங்குநிறையும் படங்கள், திங்கள் செவ்வாய் கிழமைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் அரங்கு நிறைய வேண்டுமாம். அப்படி நிறைந்தால் மட்டுமே அந்தப் படம் வெற்றிப்படமாக அமையுமாம்.

பொங்கலுக்கு வெளியான நான்கு படங்களும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் 30 சதவிகிதம் மட்டுமே நிறைந்ததாம்.

அப்படி என்றால்?