‘பென்சில்’ படம் வெளிவருவதில் மீண்டும் சிக்கல்….! – தடை கேட்டு கோர்ட்டுக்குப் போகும் தனியார் பள்ளிகள்!

850

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் பள்ளி நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.

இவை மட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் பென்சில் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றனவாம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் கூட பென்சில் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாம்.

இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று தனியார் பள்ளிகளை பிரம்பால் விளாசுகிறதாம் பென்சில் படம்.

கரன்சிகளை அள்ள வேண்டிய… அட்மிஷன் நேரத்தில் இப்படி ஒரு படம் வெளிவந்தால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், சில தனியார் பள்ளி நிர்வாகிகள், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி பென்சில் படத்துக்கு  தடைவிதிக்கக் கோரி கோர்ட் படியேற தயாராகி வருகிறார்களாம்.

பென்சில்  படத்துக்கு ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து…. அதை எல்லாம் சமாளித்து படம் ரிலீஸ் ஆகுமா என்பதே சந்தேகம்.

இந்த லட்சணத்தில் இன்னொரு பஞ்சாயத்தா?