பழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்

pirajan_asmitha_pazhaya-vannarapettai

வட சென்னை பகுதியைக் குறிக்கும் டைட்டில், அல்லது கதைக்களம் என்றாலே அய்யோ…. இன்னொரு ரௌடிக்கதையா? என அடிவயிற்றில் பகீரென்கிறது.

பழைய வண்ணாரப்பேட்டை படமும் ஏறக்குறைய இப்படிப்பட்டதொரு கதை அம்சம் கொண்டதுதான். ஆனால், முற்றிலும் இந்த ரகம் என்று சொல்லிவிடவும் முடியாது.

பழைய வண்ணாரப்பேட்டை என்றாலே.. ரௌடிசம், அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை சமூகவிரோத காரியங்களுக்குப்பேர் போன ஏரியா என்ற கற்பிதம் இருக்கிறது தமிழ்சினிமாவில்.

அதை மேலும் உறுதிபடுத்துவதுபோல் பழைய வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சமூகவிரோத சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குர் மோகன்.ஜி.

ஓரளவுக்கு ரசிக்கும்படியாகக் கொடுத்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.
கதை?

படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர் பிரஜன். அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தில் பிரஜனையும், அவரது நண்பர்களையும் சந்தேகத்தில் அழைத்துப்போகிறது போலீஸ்.

விசாரணைக்குப் பிறகு பிரஜன் விடுவிக்கப்பட அவரது அப்பாவி நண்பரை பொய்யாய் குற்றவாளியாக்குகிறது போலீஸ்.

நண்பனை காப்பாற்ற உண்மைக்குற்றவாளியைத் தேடி களத்தில் இறங்குகிறார் பிரஜன்.

இன்னொரு பக்கம் போலீஸ் உயர்அதிகாரியான ரிச்சர்டும் குற்றவாளியைத்தேடி அலைகிறார்.

இருவரில் யார் உண்மைக்குற்றவாளியை கண்டுபிடித்தனர்?

தன்னுடைய நண்பனை பிரஜன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’யின் ஸ்டோரிலைன்!

படத்தின் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தாலும், நண்பனை காப்பாற்ற பிரஜன் களத்தில் இறங்கியபிறகுதான் படம் வேகமெடுக்கிறது.

சாதாரண சண்டையில் நடந்த கொலை என்பதைத்தாண்டி, அது அரசியல் கொலையாக மாறுவதும், அதன் காரணத்தின் அடிவேரைத்தேடி பிரஜன் செல்வதுமாக படம் முழுக்க தேடல்தான்.

சற்றே யதார்த்தமான காட்சிகளுடன் விறுவிறுப்பாக படம் நகர்வதால் கதையுடன் ஒன்றி நம்மாலும் பயணிக்க முடிகிறது.

எடுத்துக் கொண்ட கதையிலிருந்து விலகாமல் பாடல் காட்சிகளை அமைத்ததில் மட்டுமின்றி, கதைக்கு உதவாத காமெடி காட்சிகளை தவிர்த்ததிலும் இயக்குநர் மோகன்.ஜி வெற்றியடைந்திருக்கிறார்.

தான் ஏற்ற கதாபாத்திரத்தை இயல்பான நடிப்பால் நம்ப வைத்திருக்கிறார் பிரஜன்.

அவருடைய காதலியான அஷ்மிதாவுக்கு அதிக வேலையில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் ‘கவனிக்க’ வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட். கொஞ்சம் நடிங்க பாஸ்.

இசை அமைப்பாளர் ஜூபின் அறிமுக இசையமைப்பாளராம். அனுபவமிக்க இசையை தந்திருக்கிறார்.

பாருக்கின் ஒளிப்பதிவில் பழைய வண்ணாரப்பேட்டையே கண்முன் கொண்டு விரிகிறது.

 

tamilscreen.com rating

review-rating-3-good