பசங்க 2 – விமர்சனம்

1082

‘தாரே ஜமீன் பர்’ படம் போன்ற முயற்சிகள் தமிழில் சாத்தியமா என்று ஆதங்கப்பட்டவரா நீங்கள்?

பசங்க-2 உங்களுக்கான படம்.

தமிழில் குழந்தைகளை கவனத்தில் கொண்டு எடுக்கப்படும் படங்கள் அரிது, அல்லது இல்லை.

குழந்தைகளையே தன் பிரதான பார்வையாளராக எண்ணி முதல் படத்திலேயே, குழந்தைகளின் உலகத்தை யதார்த்தமாக பதிவு செய்தவர் இயக்குநர் பாண்டிராஜ்.

‘பசங்க’ படத்தில் தனக்கு பரிச்சயமான கிராமத்துப் பிள்ளைகளின் வாழ்க்கையை படமாக்கிய பாண்டிராஜ்,

இதோ…இப்போது நகரத்துக் குழந்தைகளின் வாழ்வியலை ‘ஹைக்கூ’ கவிதையாக்கி இருக்கிறார் -‘பசங்க 2’ படத்தில்.

‘தாரே ஜமீன் பர்’ டிஸ்லெக்சியா என்கிற வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய படம் என்றால், பசங்க-2 அதீத குறும்புத்தனம் செய்யும் ‘ஹைபர் ஆக்டிவிட்டீஸ்’ (Attention Deficit Hyperactivity Disorder) என்கிற பாதிப்பு கொண்ட குழந்தைகளின் கதை.

குழந்தைகளின் கதை…. குழந்தைகள் படம் என்று பெயர்தான்….. உண்மையில் பசங்க- 2, வளர்ந்த குழந்தைகளுக்கான…. யெஸ்… பெரியவர்களுக்கான படம்.

‘ஹைபர் ஆக்டிவிட்டீஸ்’ பாதிப்புக்குள்ளான இரண்டு குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களாலும், பள்ளிகளாலும் எப்படி வெறுக்கப்படுகிறார்கள்… விரட்டப்படுகிறார்கள் என்பதை மட்டுமல்ல, இந்த குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் பெற்றோர்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரிய வைத்திருக்கிறார் பாண்டிராஜ்.

கார்த்திக் குமார் – பிந்து மாதவி, முனீஸ்காந்த் – வித்யா…. இரண்டு தம்பதிகள்.

இவர்களின் சுட்டிக்குழந்தைகளால்தான் பிரச்சனை. சேட்டை என்றால்… அப்படியொரு சேட்டை.

அப்பார்ட்மெண்ட்வாசிகள் தொடங்கி ஆசிரியைவரை ஒருத்தரையும்விட்டு வைக்காமல் அநியாயத்துக்கு படுத்தி எடுக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர்வடிக்காத குறைதான்.

ஆபத்பாந்தவன்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள் டாக்டர் தமிழ்நாடனும் (சூர்யா) அவரது மனைவியான ஆசிரியை வெண்பாவும் (அமலா பால்).

‘ஹைபர் ஆக்டிவிட்டீஸ்’ பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு? என்பது பசங்க- 2 படத்தின் மிச்ச கதை சொல்லும் பாடம்.

கொஞ்சம் பிசகினாலும் கொட்டாவிவிட வைக்கும் கதைதான்.

படு புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தியில் பசங்களுக்கான படத்தையே பக்கா பொழுதுபோக்குப்படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ்.

சூர்யா, அமலாபால், கார்த்திக் குமார் ,பிந்து மாதவி, முனீஸ்காந்த், வித்யா என படத்தில் பரிச்சய முகங்கள் இருந்தாலும் மொத்தப்படத்தையும் தன் பிடிக்குள் வைத்திருப்பது கவின், நயானாவாக நடித்துள்ள நிஷோஷ், மற்றும் வைஷ்ணவிதான். அதிலும் வைஷ்ணவி நடிப்பில்…. குட்டி ராட்சசி.

படத்தின் இடைவேளையில் எண்ட்ரி கொடுக்கவும்…. அதன் பிறகும் குழந்தைகளை ‘விளையாடவிட்டு’ வேடிக்கைப் பார்க்கவும் மிகப்பெரிய மனசும், துணிச்சலும் வேண்டும்.

டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யாவுக்கு இந்த இரண்டுமே இருக்கிறது. பாராட்டுக்கள் சூர்யா.

தான் மிகப்பெரிய மாஸ்ஹீரோ என்பதை மறந்து குழந்தைகளுக்கான படத்தில் தனக்கான தீனி இவ்வளவுதான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஆசிரியை வெண்பாவாக… ஜோதிகா நடித்திருக்கலாமோ?

பசங்க – 2 படத்தை டிஜிட்டலில் செதுக்கிய ஓவியமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம். யப்பா… காட்சிக்கு காட்சி கலர்ஃபுல்.

கண்களுக்கு பாலசுப்பிரமணியெம் என்றால், காதுகளுக்கு அரோல் கரோலி. பின்னணி இசையில் என்னவொரு நேர்த்தி? சிம்மாசனம் காத்திருக்கிறது தம்பி.

நகர வாழ்க்கையில் தங்களது பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் தவிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தே தீர வேண்டிய படம் – பசங்க-2.