அரிதாரம் பூசிய ஆஸ்கார் வெற்றியாளர்….

1510

ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாத் பிரபாகர் இயக்கும் படம்- ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

இந்தப் படத்தில்தான் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாகி இருக்கிறார்.

மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

“இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரஹ்மான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள்.

ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ரசூல்.

இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம்தான் தலைநகர், அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார்.

ஒலிதான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம்.

ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர். ரசூல் ஒரு சவுண்ட் என்ஜினியர் அல்ல, அவர் ஒரு சவுண்ட் டிசைனர்.

மலையாளத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள், இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும்” என்று ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தைப் பற்றியும் ரசூல்பூக்குட்டி பற்றியும் மனசாரப் பாராட்டியிருக்கிறார் வைரமுத்து இந்தப்படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

“பூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்னபோது தான் அதன் பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன்.

அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம். பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல். வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு. ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார்” என்று ரசூல் பூக்குட்டியைப் பாராட்டித்தள்ளியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

“ 2002 ஆம் ஆண்டு லண்டனில் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து, உங்களின் ரசிகன் என சொன்னேன். 15 வருடங்களுக்கு பிறகு ஒரு இசையமைப்பாளராக, என்னுடைய இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திப்பது எனது கனவு நனவான தருணம்” என்று புளகாங்கிதப்பட்டார் இசையமைப்பாளர் ராகுல் ராஜ்.

“எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். ராவணன் படத்தின் டப்பிங்கின் போது, வைரமுத்து அவர்கள் தம்பி தமிழுக்கு வா, நல்ல கதைகளை திரையில் கொடு, உனக்கு நான் ஆதரவு தருகிறேன் என்றார். இதோ வந்திருக்கிறேன், ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் முனைப்போடு. பார்வையில்லாதவர்களும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம்” என்றார் இயக்குநர் பிரசாத் பிரபாகர்.

“பிப்ரவரி 22 அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும்.” என்கிறார் படத்தின் கதாநாயகன் ரசூல் பூக்குட்டி.