நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் இல்லை! – பின்னணியில் நடந்த பேரங்கள்…பேச்சுவார்த்தைகள்…

2917

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று வெளியீடு என்று ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டநிலையில்….

திட்டமிட்டபடி படம் இன்று வெளியாகவில்லை.

என்ன காரணம்?

தமிழில் ஜெயம் ரவியையும், தெலுங்கில் நானியையும் வைத்து இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட ‘நிமிர்ந்து நில்’ படத்தின் பட்ஜெட் சுமார் 22 கோடி.

ஜெயம் ரவிக்கு தமிழில் அவ்வளவு பெரிய பிசினஸ் இல்லை.

அதேபோல், நானிக்கும் தெலுங்கில் பெரிய பிசினஸ் இல்லை.

என்றாலும், இரண்டு மொழிகளிலும் படத்தை எடுத்ததால் சுலபமாக 30 கோடிக்கு படத்தை பிசினஸ் செய்துவிடலாம், 8 கோடியை லாபமாக வீட்டுக்கு எடுத்துப்போகலாம் என்று கணக்குப்போட்டிருந்தார் தயாரிப்பாளர் சீனிவாசன்.

நடந்ததோ வேறு…!

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த தயாரிப்பாளருக்கு ஆந்திராவிலிருந்து வந்தது முதல் அதிர்ச்சி செய்தி.

நானி நடித்து அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் எதிர்பார்த்தபடி ஓடாததினால், நிமிர்ந்து நில் தெலுங்குப் பதிப்பை இப்போது வெளியிட வேண்டாம், தள்ளி வையுங்கள் என்பதே அது.

தெலுங்குப் பதிப்பை தள்ளி வைத்ததால், படத்தின் பேரில் வாங்கிய கடனை ‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ் அன்றே திருப்பிக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உருவானது.

எனவே, பேசிய தொகையைவிட கூடுதலாக பணம் கொடுத்தால்தான் பெட்டியைக் கொடுக்க முடியும் என்று விநியோகஸ்தர்களிடம் கூறி இருக்கிறார் தயாரிப்பாளர்.

விநியோகஸ்தர்களோ தங்கள் பங்குக்கு ஒரு குண்டைப்போட்டிருக்கின்றனர்.

ஆதிபகவன் தோல்வியை காரணம் காட்டி, ஏற்கனவே ஒப்புக்கொண்ட விலையைக் கொடுக்க முடியாது. பேசியதைவிட குறைவான தொகையைத்தான் தருவோம் என்று சொல்லிவிட்டனர்.

ஜெயம் ரவியின் முந்தைய படமான ஆதிபகவன் படத்தின் படு தோல்வி, ‘நிமிர்ந்து நில்’ பிசினஸை பிசுபிசுக்க வைத்துவிட்டதால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த விலையைக் கொடுத்து பெட்டியை வாங்க யாரும் தயாராக இல்லை.

இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக பல கட்டமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் பிரயோஜனமில்லை.

இதற்கிடையில் ரிலீஸ் தேதியும் நெருங்கி வர, எப்படியும் விநியோகஸ்தர்கள் இறங்கி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், இன்று படம் வெளியாவதாக பப்ளிசிட்டி செய்துவிட்டார் தயாரிப்பாளர்.

அவரது கணக்கு தப்பாகிவிட்டது.

இந்த விவரம் தெரியாமல், எப்போதோ பதிவு செய்யப்பட்ட ‘நிமிர்ந்து நில்’ படக்குழுவினரின் பேட்டிகளை சில பண்பலை வானொலிகள் ஒலிபரப்பிக் கொண்டிருப்பதுதான் உச்சகட்ட காமெடி.