நேர்முகம் – விமர்சனம்

720

‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் முரளிகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

இப்படி ஒரு படத்தை இயக்காமல் இருந்திருந்தால் ‘பார்வை ஒன்றே போதுமே’ பட இயக்குநர் என்ற பெயராவது அவருக்கு மிஞ்சியிருக்கும்.

அந்தளவுக்கு அவரது முந்தைய அனுபவங்களையே சந்தேகப்படுமளவுக்கு படு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் முரளி கிருஷ்ணா.

புதுமுக ஹீரோ, பட்ஜெட் போன்ற நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத ஒரு கதையையும், இடதுகையால் எழுதியை திரைக்கதையையும் வைத்துக் கொண்டு படம் எடுத்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவது?

ஊருக்கு வெளியே, தனியான இடத்தில் கிளினிக் நடத்துகிறார் மனோதத்துவ டாக்டரான ஆதித்யா மேனன்.

தன் காதலி மீனாட்சிக்கு இருக்கும் மன அழுத்த பிரச்னைக்காக அங்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார் ரஃபி.

அந்த காதல் ஜோடியை மட்டுமல்ல வேறு பல ஜோடிகளையும் தனக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸ் ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறார் ஆதித்யா மேனன்.

இங்கு என்ன நடக்கிறது? என்று யார் கேள்வி கேட்டாலும் அங்கிருக்கும் அடியாட்கள் கேள்வி கேட்பவர்களை சுளுக்கெடுக்கிறார்கள்.

அந்த டாக்டர் எதற்காக இவர்களை அந்த பங்களாவில் அடைத்து வைத்திருக்கிறார்?

அவரிடமிருந்து காதல் ஜோடிகள் தப்பித்தார்களா? இல்லையா என்பதுதான் நேர்முகம்.

சித்தி கொடுமையை அனுபவித்ததால் ஆதித்யா மேனன் பெண்களை வெறுக்கிறாராம். அதனால்தான் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் ஜோடிகளை  அடைத்துவைத்து சித்ரவதை செய்கிறாராம்.

அட இப்படியும் ஒரு டாக்டரா என அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த ட்விஸ்ட்டையும் கொடுத்து நம்மை நிலைகுலைய வைக்கிறார் இயக்குநர்.

அங்கே நடந்த பல கொலைகளை செய்தது ஆதித்யா மேனன் அல்ல, ஹீரோ ரஃபி என்று கதை புதிய ட்ராக்கில் பயணிக்கிறது.

ரஃபி ஏன் கொலை  செய்கிறார் என்பதற்கான ப்ளாஷ்பேக்கில், மீரா நந்தனை ரஃபி காதலிக்கிறார். காதல் தோல்வியில் முடிய, அதனால் இவர் சைக்கோவாகிவிட்டாராம்.

ஒரு காலத்தில் லைம்லைட்டில் இருந்தர் மீனாட்சி, மீரா நந்தன் இரண்டு கதாநாயகிகள். நடிகைகளின் வாழ்க்கை எவ்வளவு பரிதாபகரமானது என்பதை புரிய வைக்கிறார்கள்.

சம்பளம் தருவார்களா என்ற சந்தேகத்திலேயே நடித்ததுபோல் படம் முழுக்க சுரத்தே இல்லாமல் நடித்திருக்கிறார் வில்லன் ஆதித்யா மேனன்.

பாண்டியராஜனுக்கு போலீஸ் அதிகாரி வேடம். நெல்லை சிவாவும், சிசர் மனோகரும் சிரிப்பு போலீஸாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். கடைசிவரை அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்காமல்போனதுதான் துரதிஷ்டம்.

இயக்குநராக முரளி கிருஷ்ணாவுக்கு வெற்றிகிடைக்கவில்லை என்றாலும் இசையமைப்பாளராக தாளம் போட வைக்கும் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

tamilscreen.com rating:

review-rating-2-average