ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிந்துவிட்டதா நடிகர் சங்கம்?

871

காவல்துறையின் நடவடிக்கை என்பது பல நேரங்களில் ஆளும்கட்சியின் கண்அசைவில்தான் நடைபெறும். குறிப்பாக பெரிய இடத்து விவகாரம் என்றால், காவல்துறையின்  நடவடிக்கை உடனே பாயாது. ஆட்சியாளர்களிடம் சிக்னல் கிடைத்த பிறகே விசாரணையை தொடங்குவார்கள்.

பவர்ஸ்டார், பச்சமுத்து என இதற்கு ஏகப்பட்ட  உதாரணங்கள் உண்டு – கடந்த, நிகழ் காலங்களில்.

இப்போது எதற்காக காவல்துறை பற்றி காலட்சேபம்?

விஷயம் இருக்கு பாஸ்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில்  2006 -ஆம் ஆண்டு முதல் 2015 -ஆம் ஆண்டு வரை அறங்காவலர்களாக இருந்த, அப்போதைய சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் போலி ரசீதுகள் மூலமும், சங்க உறுப்பினர்களை ஏமாற்றியும், 1.65 கோடி ரூபாயை  முறைகேடு செய்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 3 -ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் இப்போதைய தலைவரான நடிகர் நாசர்.

ஏறக்குறைய ஐந்து மாதங்கள் கடந்தும் கூட  நாசர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

என்ன காரணம்?

தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ஆளும்கட்சி தரப்பு கடும்கோபத்தில் இருப்பதாக ஒரு தகவல் உண்டு. அதனாலேயே அவர்கள் கொடுத்த புகாரை காவல்துறை  கிடப்பில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே, இனியும் காவல்துறையை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த நடிகர் சங்க நிர்வாகத்தினர், நடிகர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக தாம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நடிகர் சங்கம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ள நடிகர் நாசர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உருவாக்கிய நடிகர் சங்கம் அறக்கட்டளையில் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக ஆர்.சரத்குமார், பொது செயலாளராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் மட்டும் அறக்கட்டளையின் நிர்வாகிகளாக இருந்து நிதி ஆதாரங்களை கையாண்டனர்.

2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இதில், தலைவராக நானும், பொது செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டோம்.

இதையடுத்து 2009-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி வரையிலான அறக் கட்டளையின் வரவு செலவு கணக்கை ஒப்படைக்கும்படி, முன்னாள் நிர்வாகிகளாக சரத்குமார் உள்ளிட்டோரிடம் பலமுறை கேட்டோம். ஆனால், அவர்கள் கணக்கு விவரங்களை தருவதை தவிர்த்து வந்தனர்.

இதையடுத்து பிரபல ஆடிட்டர்கள் மூலம் இருக்கின்ற ஆவணங்களை ஆய்வு செய்தோம். அப்போது, போலி ரசீதுகள் மூலமும், சங்க உறுப்பினர்களை ஏமாற்றியும், ரூ.1.65 கோடியை சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததையடுத்து சரத்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கடந்த மார்ச் 3-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், போலீசாருக்கு கடந்த ஜூன் 27-ந்தேதி நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

இதுநாள் வரை நான் கொடுத்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு (1-வது அணி) போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடவேண்டும்.”

என்று நாசர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான, அவருக்கு விசுவாசமான துறை.

ஆனாலும் காவல்துறைக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பது நிச்சயமாக ஜெயலலிதாவை ஆத்திரப்படுத்தும்.

இதற்கான ஜெயலலிதாவின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்பதையும், அதை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.