கதாநாயகனை முன்னிறுத்தும் படங்கள் ஓடுவதில்லை..! – இயக்குநரின் துணிச்சல் பேச்சு..

2027

விஷால் பிலிம் பேக்டரியின் அடுத்த படம் ‘நான் சிகப்பு மனிதன்’. விஷால் – லட்சுமிமேனன் நடிக்கும் இப்படத்தை திரு இயக்குகிறார்.

ஏற்கெனவே விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ‘சமர்’ ஆகிய தோல்விப்படங்களை இயக்கியவர் இவர்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி உடன் இணைந்து யு டிவி தயாரிக்கிறது.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை பற்றி இயக்குநர் திரு என்ன சொல்கிறார்?

“ஒவ்வொருவருக்கும் ஆசைகள் உண்டு. ஆனால் அதை அடைய முயற்சிகள் எடுப்பதில்லை. கனவை நனவாக்க முயற்சிகள் எடுப்பதில்லை. தடைகளைக் கண்டு விட்டுவிடுகிறார்கள். ஒரு மனிதனின் ஆசைகளைப் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’.

இந்தப் படத்தின் நாயகன் என்ன ஆசைப்படுகிறான்? அதை நோக்கிச் செல்ல என்னென்ன தடைகள் உள்ளன? எல்லாவற்றையும் மீறி எப்படி எதிர்கொண்டு அடைகிறான் என்பதே படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் போலீஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன். துரோகி விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு.

இந்தப்படத்தில் விஷால் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன்மாதிரியும் இல்லை. கதை புதிது, கதாபாத்திரம் புதிது.

இப்போது கதாநாயகனை மட்டுமே முன்னிறுத்தும் படங்கள் ஓடுவதில்லை. போக்கு மாறியுள்ளது.

‘பாண்டியநாடு’ வெற்றிக்குப்பின் விஷால் புது ரத்தம் பாய்ந்த உற்சாக மனிதராகிவிட்டார்.

லட்சுமி மேனனுக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம். எனவே கதை சூழல் கருதி முத்தக்காட்சிக்கு சம்மதித்து நடித்துளார்.

யதார்த்தம் மீறாத ஆக்ஷன் த்ரில்லர் இது.

பலரும் கேட்கிறார்கள் விஷால் நண்பராக இருப்பதால் 3 ஆவது படம் கொடுத்தாரா என்று. நண்பராக இருந்தால் பணம் கொடுத்து உதவலாம். படம் கொடுப்பாரா? இந்தக் கதை பிடித்துதான் நடிக்க ஒப்புக் கொண்டார்.”

என்கிற இயக்குநர் திரு கூடுதலாக இன்னொரு தகவலையும் சொன்னார்….

‘நான் சிகப்பு மனிதன்’ என்ற தலைப்பு ரஜினி நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் தயாரிப்பாளர் பூரண சந்திராவிடமிருந்து அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன்

இசை – ஜி. வி. பிரகாஷ்குமார்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.