மிஷ்கினுக்கு அம்மா நடிகையின் அழைப்பு

1509

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் “சீமத்துரை”.

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்தபாலன், மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர், வேல ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீமத்துரை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இத்தனை பிரபலங்களையும் திரட்டிக்கொண்டு வந்தவர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர்.

“பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜி சந்திரசேகர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கே வந்திருக்கிருக்கிறேன்.” என்று தன்னுடைய பேச்சில் போட்டு உடைத்தார் இயக்குநர் மிஷ்கின்..

தொடர்ந்து பேசிய மிஷ்கின்…

“இயக்குநர் சந்தோஷை முதன் முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார். ட்ரைலரில் கருவாடு விற்பதுபோல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது.”என்றெல்லாம் பேசி வாயில் எச்சில் ஊற வைத்த மிஷ்கின், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டினார்.

“இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால்தான் நடிக்க சம்மத்தித்தேன். சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” என்று சுருக்கமாக பேசினார் விஜி சந்திரசேகர்.

“மதயானை கூட்டம் படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில்தான் இந்தப்படத்திலும் விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார். அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள்.

பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.