டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி, வாட்ஸ்அப் மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பையும், துரைராஜ் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பாடலாசிரியர் சாரதி, “கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதே இப்படத்தின் மையக்கரு” என்று குறிப்பிட்டார்.
நடிகர் வாட்ஸ்அப் மணி, “இது எனது முதல் திரைப்படம். இயக்குநர் கிஷோருடன் குறும்பட காலத்திலிருந்து பயணித்துள்ளேன். ‘ஹார்ட்டின்’ அனைவரையும் கவரும் ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும்” என்றார்.
நடிகை டெப்னிதா கர், தயாரிப்பாளரும் இயக்குநரும் அளித்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து, ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நடிகர் வர்கீஸ் மேத்யூ, “இந்தப் படத்தில் வித்தியாசமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், “‘ஹார்ட்டின்’ ஒரு வேகமான திரைப்படம் மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய படமாக இருக்கும். ராஜேஷ் முருகேசனின் இசையும், முகேஷின் ஒளிப்பதிவும் இப்படத்தின் பலம்” என்றார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், “இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. முழு சுதந்திரத்துடன் பணியாற்றியுள்ளேன். ஐந்து பாடல்களும் இளைஞர்களை கவரும்” என்றார்.
நடிகை இமயா டி, “இது எனது முதல் திரைப்படம். சனந்த் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். அனைவரையும் எளிதில் இணைக்கும் அழகான திரைப்படம் இது” என்று கூறினார்.
நடிகை மடோனா செபாஸ்டியன், “பல காதல் கதைகள் வந்திருந்தாலும் ‘ஹார்ட்டின்’ தனித்துவமான உணர்வை தரும். குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டிய படம்” என்றார்.
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை, “இந்தப் படம் காதலை ஒரு புதிய கோணத்தில் அணுகுகிறது. இதயத்தால் ரசித்தால் அதன் உணர்வை முழுமையாக அனுபவிக்க முடியும்” என்றார்.
இயக்குநர் கிஷோர் குமார், “இன்றைய தலைமுறையின் காதல் உறவுகளில் பல புதிய வரையறைகள் வந்தாலும், காதல் என்ற உணர்வு என்றும் மாறாது. அந்த எவர்கிரீன் உணர்வை புதுமையான முறையில் சொல்லும் திரைப்படம் தான் ‘ஹார்ட்டின்’. சனந்த் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக சுமந்துள்ளார். மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா டி ஆகியோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறும்” என்றார்.
நடிகர் சனந்த், “முதலில் இது வழக்கமான காதல் கதை என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பின்போது கதையின் ஆழமும், உணர்வுகளும் புரிந்தன. இந்தப் படத்தின் உண்மையான ஹீரோக்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். இரண்டு நாயகிகளுடனான காதல் பயணமும் கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஹார்ட்டின்’ ரசிகர்களின் இதயத்தை தொடும் ஆத்மார்த்தமான திரைப்படமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இசை, காதல், உணர்வுகள் மற்றும் இளமை ததும்பும் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படம், ஜூன் 26 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.