20 வருடங்களுக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் உயிருக்கு உயிராக

580

மக்கள் மத்தியில் மரியாதைக்குரிய படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ். எண்பதுகளில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போவார்கள். அத்தனையும் அற்புதமான படங்கள்.

ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது, வேந்தர் புரடக்ஷன்ஸ் (வேந்தர் மூவிஸ் அல்ல) உடன் இணைந்து, விஜய மனோஜ்குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்ற படத்தைத் தயாரிக்கிறார் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி.
விஜய மனோஜ்குமார் புதுமுக இயக்குநரா என்று கேட்டுவிடாதீர்கள்.
இதே கோவைதம்பி, 26 வருடங்களுக்கு முன் மனோகர் என்ற இளைஞரை மனோஜ்குமார் என்ற பெயரில் மண்ணுக்குள் வைரம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப்படத்துக்குப் பிறகு சுமார் 23 படங்களை (23 படங்களும் சுமார்தான்) இயக்கிய மனோஜ்குமார்தான் இப்போது விஜய மனோஜ்குமாராகி இருக்கிறார்.
20 வருடங்களுக்குப் பிறகு படம் எடுக்க வந்திருக்கும் கோவைத்தம்பி எத்தனையோ இளம் இயக்குநர்கள் இருக்கும்போது மனோஜ்குமாரை தேர்வு செய்தது ஏன்? என்று கேட்டால், அவர் சொன்ன கதைதான் என்று சொல்கிறார்.
அப்படி என்னப்பா உலக மகா கதை?
தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள் படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம் மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களின் காதலுக்கு உதவி செய்ய வேண்டும். இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப்பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்… நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக அது இருக்கும்… இந்தப் படத்தில் ஒரு ஹீரோ ஏரோநாட்டிகல் இன்ஜினியர். இன்னொரு ஹீரோ கம்ப்யூட்டர் இன்ஜினியர். எதிர்காலத்தில் போர்கள் தரையில் நடைபெறப்போவதில்லை. அவை வான்வெளியில்தான் நடைபெறும். அப்படிப்பட்ட அபாயகரமான போர்களின் போது நமது இராணுவத்திற்குப் பெரிதும் பயன்படும் தீர்வினை இந்த மாணவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
உயிருக்கு உயிராக படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்… என் வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் க்ளைமாக்ஸை அமைத்திருக்கிறேன்… இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்…” என்கிறார் இயக்குநர் மனோஜ்குமார்.
உயிருக்கு உயிராக படத்தில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்-பிரீத்திதாஸ் ஆகியோர் நாயக, நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குனர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத இசையமைக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாந்தகுமார்.