மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரின் ‘எச்சரிக்கை’

1554


கடந்த 20-ஆம் தேதி முதல் சென்னையிலிருக்கும் மால், தியேட்டர்களில் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்னும் வாசகம் காணப்பட்டது.

இது திருடர்களிடமிருந்து கவனமாக இருக்க அரசு வெளியிட்டுள்ள வாசகமா ? அல்லது அரசியல் பிரச்சாராமா? என்றெல்லாம் மக்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளவில்லை.

ஏதோ ஒரு சினிமாவின் புரமோஷன் இது என்பதில் உறுதியாக இருந்தனர்.

அதுபோலவே, எச்சரிக்கை படத்தின் முதல் பார்வையை மணிரத்னம், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டனர்.

மணிரத்னம் கடல், ஓ காதல் கண்மணி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி ஆகிய  படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் என்பவர் எச்சரிக்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.

சி.பி. கணேஷ், சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்கும் த்ரில்லர் படமாக உருவாகும் எச்சரிக்கை படத்தில் சத்யராஜ், வரலஷ்மி சரத்குமார், விவேக் ராஜ்கோபால் (புதுமுகம்), மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

விஜய் ஆதிநாதன் கலை இயக்கத்தை கவனிக்க, கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

எச்சரிக்கை படத்தின் கதை என்ன?

“பணம், பேராசை மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக கொண்டதாக இருக்கும்.

இதில் இரு இணை கதைகள் ஒரு கட்டத்தை நோக்கியே நகரும். அதில் ஒன்று ஒரு குற்றத்தை பற்றியும், மற்றொன்று அதை புரிந்தவர்களை தேடுபவரை பற்றியும் இருக்கும்.

இந்த கதாபாத்திரங்களின் பின்கதையே இவர்களை கதையில் வழிநடத்தி செல்வது இப்படத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.

இக்கதையில், யாரையுமே நம்மால் கருப்பு, வெள்ளை என்று பாகுபடுத்திவிட முடியாதபடி, அவர்கள் ஒரு கலவையாகவே இருப்பார்கள்.” என்கிறார் இயக்குநர்.