மனிதன் – விமர்சனம்

868

நடைபாதையில் உறங்கியவர்கள் மீது  ஹிந்தி நடிகர் சல்மான்கான் காரை ஏற்றிய சம்பவத்தின் அடிப்படையில், ஹிந்தியில் எடுக்கப்பட்ட ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் மனிதன் படம்.

பரபரப்பாக பேசப்பட்ட அந்த ‘விபத்து’ வழக்குதான் மனிதன் கதையின் அடித்தளம்.

உண்மைச் சம்பவத்தை  மையக்கதையாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய வாதத்திறமையால் பெயில் கூட வாங்கிக் கொடுக்க முடியாத அமெச்சூர் வக்கீல் ஒருவரின் கதையைச் சொல்லி இருக்கிறார்கள்.

நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஏழை கூலித்தொழிலாளர்களின் மேல் காரை ஏற்றி, அவர்களின் சாவுக்குக் காரணமான பணக்கார வீட்டுப்பையனுக்கு, தன்னுடைய அசாத்தியமான வாதத்திறமையால் விடுதலை பெற்றுத் தருகிறார் பிரபல வக்கீலான ஆதிசேஷன் (பிரகாஷ் ராஜ்).

மற்ற வக்கீல்கள் மட்டுமல்ல, நீதிபதிகளே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு  அதிபுத்திசாலி வக்கீலான ஆதிசேஷனை எதிர்த்து, அந்த வழக்குக்கு  மீண்டும் உயிர் கொடுக்கிறார் அமெச்சூர் வக்கீலான சக்திவேல் (உதயநிதி).

யானை காதில் புகுந்த கட்டெறும்பைப் போல் பிரகாஷ்ராஜை உதயநிதி எப்படி வெல்கிறார் என்பதுதான் மனிதன் படத்தின் மிச்ச கதை.

கதையில் உள்ள உண்மைத்தன்மையினால் படத்தின் துவக்கமே சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சனைக்குள் உதயநிதி வருகிறவரை கேஸ் கிடைக்காத வக்கீலைப் போல் இலக்கில்லாமல் சுற்றுகிறது திரைக்கதை.

பொள்ளாச்சியில் உதயநிதியின் பின்னணி, ஹன்சிகா உடனான உயிர்ப்பே இல்லாத காதல், கோர்ட்டில் நடக்கும் காமெடிகள் என ஆமையைவிட சற்று வேகமாக நகரும் காட்சிகள்  படத்தின் முதல்பாதியை காலி செய்துவிடுகின்றன.

பிரகாஷ்ராஜை எதிர்த்து உதயநிதி பொது நல வழக்கை தாக்கல் செய்த பிறகே படம் டேக் ஆஃப் ஆகிறது.

படத்தின் கடைசி 30 நிமிட  நீதிமன்றக் காட்சிகள் குறிப்பாக க்ளைமேக்ஸ்  படத்தின் பெரிய பலம்.

குமாரசாமியைப்போல்  அறிமுகமாகிற ராதாராவி குன்ஹாவாக மாறுகிற காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. ஆனாலும் கையில் கிடைத்ததை எடுத்து வக்கீலை அடிக்க முற்படுவது கொஞ்சம் ஓவர்தான்.

முந்தைய படங்களில் காதல், காமெடி, ஆக்ஷன் என  சராசரி ஹீரோவாக இருந்த உதயநிதி, இந்தப்படத்தில் ‘நடிப்பதற்கு’ ஏதுவான கதையை தேர்ந்தெடுத்தன் மூலம் தன்னை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற்றிச் செல்ல முனைந்திருக்கிறார்.  அவரது முயற்சி திருவினையாகி இருக்கிறது.

அதற்காகவே உதயநிதியை பாராட்ட வேண்டும்.

அதைவிட, ஹீரோயிஸம் துளியும் இல்லாத இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் வந்த அவரது துணிச்சலுக்கு கொடுத்தே ஆக வேண்டும் ஒரு  பூங்கொத்து.

நடிப்பென்று சொல்ல முடியாத இயல்புதான் உதயநிதியின் தனித்திறமை.

இந்தப் படத்திலும் தன் திறமையை செவ்வனே செய்திருக்கிறார்.

உதயநிதியை ஊதித்தள்ளுகிற கதாபாத்திரம் பிரகாஷ்ராஜுக்கு. பிச்சு உதறுகிறார் பிரகாஷ்ராஜ்.

ஹன்சிகாவும் படத்தில் இருக்கிறார். படத்தில் டூயட்டும் இல்லை. காதலுக்கும் முக்கியத்துவம் இல்லை. அப்புறம் என்னத்துக்கு ஹன்சிகா?  அவ்வப்போதுசோர்ந்து போகும் உதயநிதியை ‘மோட்டிவ்’ செய்வதற்காக வந்துபோகிறார் ஹன்சிகா.

ஹன்சிகாவைவிட டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கவனிக்க வைக்கும் வேடம்.

சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார் விவேக்.

கோர்ட் காட்சிகளிலும் தன்னை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி.

மனிதன் படத்தின் மிகப்பெரிய பலவீனம் சந்தோஷ் நாராயணனின் இசைதான். சந்தோஷப்பாடலுக்குக் கூட ஒப்பாரி டைப்பில் மெட்டும், குரலும். பின்னணி இசையில் பொளந்து கட்டியிருக்கிறார்.

வசனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய காட்சிகளில் கூட இடைவிடாமல் வாசித்து இம்சை பண்ணுகிறார் சந்தோஷ் நாராயணன்.

பொதுவாக நீதிமன்றத்தை பின்னணியாகக் கொண்ட படங்களில் வக்கீலின் வாதத்திறமையாக வசனங்கள் அனல் பறக்கும்.

இதில் அப்படிப்பட்ட புத்திசாலித்தனம் இல்லை.

திரைக்கதை இன்னும் ஷார்ப்பாக இருந்திருந்தால் மனிதனை இன்னும் ரசித்திருக்கலாம்.