பெரும் படம் இயக்கும் குறும்பட இயக்குநர்…

390

‘மாயா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் –  மாநகரம்.

அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா, ராமதாஸ், சார்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜாவித் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தலைப்புக்கு ஏற்ப சென்னையை கதைக்களமாகக் கொண்டு  உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதையை ‘ஹைபர் லிங்க்’  உத்தியில் அமைத்திருக்கிறார்களாம்.

சென்னையைப் பின்னணியாகக் கொண்ட படமாக உருவாகியிருப்பதால், ‘மெட்ராஸ் டே’ தினமான இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி) ‘மாநகரம்’  படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்  நடிகர் சார்லி பேசும்போது,‘‘மாநகரம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பும் முக்கிய காரணமாகும். படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும்போது ‘உங்களுக்கு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் இல்லை, நல்லவன் கதாபாத்திரமும் இல்லை. இரண்டுக்கும் நடுவில் உள்ள ‘நோபல்’ கதாபாத்திரமாக இருக்கும்’ என்றார். அதை கேட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. இப்படத்தில் நான் கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.’’ என்றார்.

மாநகரம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் நடிகர் ஸ்ரீ பேசும்போது, ‘‘இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் கதையை கேட்டு நான் வியந்துவிட்டேன். அவர் என்னிடம் கதை சொல்லி முடித்தவுடன் இப்படத்தில் நான் உங்களுக்கு துணை இயக்குநராக பணிபுரிகிறேன் என்று கூறினேன். அந்த அளவுக்கு எனக்கு கதை பிடித்துவிட்டது. இதற்கு முன்னர் நான் ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குநர் குமாராஜா தியாகராஜாவிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன். அந்த அளவுக்கு இந்த மாநகரம் வித்தியசமான படமாக அமைந்துள்ளது.’’ என்றார்.

படத்தின் மற்றொரு ஹீரோவான தெலுங்குநடிகர் சந்தீப் கிஷன் பேசும்போது, ‘‘யாருடா மகேஷ்’ படத்திற்கு பிறகு 3 வருடங்கள் கழித்து தமிழில் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் கதையை கேட்டதும் நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இக்கதை அவ்வளவு பிடித்திருந்தது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாறுபட்ட ஒரு படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘‘இப்படம் எங்கள் அனைவருக்கும் முதல் படம். இப்படத்துக்கு தயாரிப்பாளர் நினைத்திருந்தால் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து நீங்கள் பணியாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நான் கூறிய அந்த குழுவோடு பணியாற்ற என்னை அனுமதித்தனர். எங்களால் முடிந்த ரிசல்ட்டை படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார் தன்னடக்கத்துடன்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ‘மாநகரம்’ படம் குறித்து பேசும்போது, ‘‘இப்படத்தின் கதை ஊரில் இருந்து சென்னையை நோக்கி வந்த எங்களின் சொந்த கதையை போல் இருந்ததால் என்னை மிகவும் இக்கதை கவர்ந்தது. ‘மாயா’வின் இயக்குநர் அஸ்வின் சரவணனைப்போல் லோகேஷ் கனகராஜும் குறும்படம் இயக்கி வந்தவர். அவர் சொன்ன கதை எங்களுக்கு பிடித்திருந்தது. புதியவர்கள் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘மாநகரம்’ நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசை அமைப்பாளர் ஜாவித், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், பாடலாசிரியர்கள் லலித் ஆனந்த், ஆண்டனி பேஸ், நடிகர் முனிஸ் காந்த் ஆகியோரும் பேசினார்கள்.