மாற்றுத்திறனாளிகளை கஷ்டப்படுத்துகிறாரா லாரன்ஸ்?

136

லாரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி செய்துவரும் ராகவா லாரன்ஸ், திரையுலகில் அவருக்கு வரும் வருமானத்தை வைத்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு இல்லமே நடத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, தான் இயக்கும் படங்களிலும் தான் கலந்து கொள்ளும் டிவி ஷோக்களிலும் மாற்றுத்திறனாளிகளை நடனமாட வைக்கிறார்.

அதோடு, திருநங்கைகளையும் பாசிட்டிவாக காட்டி வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரியவெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில்கூட மாற்றுத்திறனாளிகளை நடனமாட வைத்து சிலகாட்சிகளை வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில், முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ். தங்களுக்கிருக்கும் குறைகளிலிருந்து மீண்டு எப்படி மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் அவர் இயக்க உள்ள படத்தின் அவுட்லைன்.

தான் உருவாக்கியுள்ள இந்தக் கதையை, தன் இல்லத்திலிருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் சொல்லி இருக்கிறார் லாரன்ஸ்.

அதைக்கேட்ட அந்த இளைஞர்கள் மிக உற்சாகமாக நடிக்க முன் வந்துள்ளனர்.

விரைவில் அப்படத்தை இயக்கும் பணிகளிலும் ஈடுபடவிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மாற்றுத்திறனாளிகளை இவர் ஆட வைப்பது குறித்து விமர்சனமும் எழுந்துள்ளது.

தன்னுடைய புகழுக்காக மாற்றுத்திறனாளிகளை லாரன்ஸ் கஷ்டப்படுத்துகிறார் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.