‘குற்றம் 23’ படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட அருண்விஜய்….

635

அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’  படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

சில தினங்களுக்கு முன் குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய அருண் விஜய் கைதாகி சிறைக்கு சென்றிருந்தால், ஹீரோ இல்லாமலே நடந்து முடிந்திருக்க வேண்டிய இசைவெளியீட்டு விழாவாகி இருக்கும்.

நல்லவேளையாக  அருண்விஜய்க்கு நேற்று ஜாமின் கிடைத்தது.

எனவே செம உற்சாகத்தில்  ஜம்மென்று வந்திருந்தார் அருண்விஜய்.

ஜெயம் ரவி, இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரியாஸ் கான் என இந்த விழாவில் ஏகப்பட்ட சிறப்பு விருந்தினர்கள்.

‘குற்றம் 23’ படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ரெதான் – தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார், கதாநாயகி மஹிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என ஒட்டுமொத்த குற்றம் 23 படக்குழுவினரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பொதுவாக இதுபோன்ற விழாக்களில் படத்தைப் பார்க்காமல், பாடல்களைக் கேட்காமல் புகழ்ந்து தள்ளுவதுதான் பொதுவான அம்சமாக இருக்கும்.

அதற்கு இந்த விழாவும் விதிவிலக்கில்லை.

“மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன். அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன்..

கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற நான் வாழ்த்துகிறேன்…” என்று வாழ்த்தினார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

“ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை  இந்த ‘குற்றம் 23’ படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார்  என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் இருக்கின்றது….” என்று கூறினார் நடிகர் ஜெயம் ரவி.

“நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர்… எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்க கூடிய ஒரு நடிகர் அருண் விஜய்…ஓடும் ரயிலில் ஏற வேண்டும் என்று சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட குதித்து விடுவார். இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய்.

அதே போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குநர் அறிவழகன். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு  ‘குற்றம் 23’ படத்தை உருவாக்கி இருக்கின்றனர். “என்று உற்சாகமாக வாழ்த்தினார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.