கடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட தடையில்லை…! – நீதிமன்றம் உத்தரவு…

702

காலம்காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களில் ஒன்று… வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்களை வெளியிடுவது.

இந்த வழக்கம் சமீபகாலமாக மாறிக் கொண்டு வருகிறது.

அதாவது, ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ரெமோ உட்பட பல படங்கள் வியாழக்கிழமை அன்றுதான் ரிலீஸ் செய்யப்பட்டன.

கூடுதலாக வசூலை அள்ளும் யுத்தியாக இருப்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமைகளில் வரத்தொடங்கிவிட்டன.

இந்த வரிசையில் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படமும் சேர்ந்திருக்கிறது.

இப்படத்தை முதலில்நவம்பர் 11-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்றுதான் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

பின்னர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்தனர்.

இதற்கிடையில், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு 10 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் விசாரணை வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று புதிய மனு ஒன்றை விநியோகஸ்தர் தரப்பில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

எனவே ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.
திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கியதும் ஏதோவொரு காரணத்துக்காக படங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

படத்தை வெளியிட திடீர் தடையாக உருவெடுத்துள்ள வழக்கை எப்படியாவது வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் பெரும் தொகையை தண்டமாக அழுது வழக்கிலிருந்து விடுபடுகின்றனர்.

இப்படியான திட்டத்தில் தாக்கல் செய்ப்பட்ட வழக்கோ என்று எண்ண வைக்கிறது கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மீது கடைசி சேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

நல்லவேளை… நீதிமன்றம் கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு பச்சைக்கொடியை காட்டிவிட்டது.