கிசுகிசுக்களை கிளப்பாதீர்கள்… ‘கிடாரி’ சசிகுமார்….

1178

தாரை தப்பட்டை அடுத்து சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’.

இதில் கதாநாயகியாக நிகிலா நடித்துள்ளார். இவர் எற்கனவே சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல் படத்தில் நடித்தவர்.

இவர்களுடன், நெப்போலியன், வேல ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ள இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார்.

‘கிடாரி’ என்ற தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறதே… படத்தில் கிடாரி என்பது யாரைக்குறிக்கிறது?

சசிகுமாரிடம் கேட்டால்…

“கிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ என்று சொல்வார்கள்.

அப்படியொரு திமிரான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்.

கேமராமேன் எஸ்.ஆர்.கதிர் மூலம் என்னை சந்தித்த  பிரசாத் முருகேசன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார்.

அவர் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்துப்போனதால் நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த படத்தை நாமே  டைரக்டு செய்யலாமே? என்று கூட நினைத்தேன்.

அந்த அளவுக்கு இந்த கதை என்னை ஈர்த்தது. அதிரடி, குடும்ப பாசம், நகைச்சுவை அனைத்தும் கிடாரி படத்தில் இருக்கின்றன.

கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். கிடாரி மிகச் சிறப்பாக வந்துள்ளது.”

சசிகுமாரின் படங்களில் சாதி பிரச்சனை சற்று தூக்கலாக இருக்கிறது என்ற  விமர்சனம் உள்ளது.

என்ன சொல்கிறார் சசிகுமார்?

“சாதிப் பிரச்சினைகள் எனது படங்களில் இருப்பதாக என்னிடமே பலர் சொல்லி இருக்கிறார்கள். ஒரே சாதிக்குள் நடக்கும் விஷயங்களைத்தான் சொல்கிறோம். இரண்டு சாதிகளை மோதவிட்டு நான் படம் எடுப்பதில்லை. உண்மையை சொல்லப்போனால்… சாதி மோதல் கதைகளில் நடிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே வைத்து இருக்கிறேன்.”

என்ற சசிகுமார் தயாரித்துள்ள 8-ஆவது படம் ‘கிடாரி’.

ஒரு தயாரிப்பாளராக சசிகுமாரின் பெருமிதங்கள் என்ன?

“எனது குருநாதர் பாலாவை வைத்து தாரை தப்பட்டை, திரையுலக பிதாமகன் பாலுமகேந்திராவை வைத்து ‘தலைமுறைகள்’ படங்களை நான் தயாரித்தது பெருமையான விஷயம்.

பாண்டிராஜ், பிரபாகரன், முத்தையா, சாக்கரடீஸ், பிரசாத் முருகேசன் ஆகிய ஐந்து பேரை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மேலும் ஐந்து புதிய இயக்குநர்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறேன். அதோடு, தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன். அடுத்து புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்க இருக்கிறேன். விரைவில் குழந்தைகளுக்கான படம் ஒன்றையும் தயாரிப்பேன்.”

‘வெற்றிவேல்’  படத்தில் நடித்த நிகிலாவை அடுத்த படத்திலேயே மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்தது என்? இதனால் கிசுகிசுக்கள் வர வாய்ப்பிருக்கிறதே…

“உண்மையை சொல்வதென்றால்… இந்தப் படத்தின் கதாநாயகி வேடத்துக்கு புதுமுகத்தைத்தான் நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். சில பேரை பார்த்தோம். ஒருத்தரும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் கடைசி நேரத்தில் நிகிலாவை கமிட் பண்ணினோம்.

நிகிலா மட்டுமல்ல, ஏற்கனவே சுவாதி, அனன்யா, லட்சுமி மேனன் ஆகியோர் இரண்டு தடவை எனக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அவர்களைப் போலத்தான் நிகிலாவும் ‘வெற்றிவேல்’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘கிடாரி’ படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார்.  இதை வைத்து கிசுகிசுக்களை கிளப்பிவிடாதீர்கள்.”

ஸ்டார் கட் சொல்வது மறந்துவிட்டதா?

“அது எப்படி மறக்கும்? சில படங்களில் நடிக்க கமிட்டாகிவிட்டேன். அவற்றில் நடித்து முடித்த பிறகு மீண்டும் படங்களை இயக்குவேன்.” என்கிறார் கிடாரி சசிகுமார்.