கிடாரி – விமர்சனம்

834

சசிகுமாரின் ஒவ்வொரு படத்தின் கதையும் நிச்சயமாக மாறுபட்டதாகவே இருக்கும்.

கிடாரி படமும் இதற்கு விதிவிலக்கில்லை.

அவரது முந்தைய படமான வெற்றிவேல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் கிடாரியாக ஆக்ரோஷமாகப் பாய்ந்திருக்கிறார் சசிகுமார்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை என்ற ஒற்றை வரியில் கடந்து சென்றுவிடக்கூடிய கதைதான்.

ஆனால், எதற்காக வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பதில்தான் சற்று வித்தியாசப்படுகிறது கிடாரி.

கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) பெயரைக் கேட்டால் சாத்தூரே நடுங்குகிறது!

அப்பேற்பட்ட கொம்பையா பாண்டியனை யாரோ வீடு புகுந்து கழுத்தில் கத்தியைச் செருகிவிட்டுப்போக, ஏரியாவே பரபரக்கிறது.

அவரை ‘செஞ்சது’ யார் என்ற கேள்விக்கு பல பேரை சந்தேகப்பட வைக்கும் உத்தியில் கதை சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன். வசந்தபாலனின் சிஷ்யராம். (நெஜம்மாவா?)

இவரா இருக்குமோ… அவரா இருக்குமோ… என பார்வையாளர்களை பதைபதைக்க வைத்துவிட்டு, கடைசியில் நம் யூகத்துக்குள் சிக்காத ஒருவரின் சட்டையைப் பிடித்து இவர்தான் கொம்பையா பாண்டியனை செஞ்சவர் என்கிறபோது பி அண்ட் சி ரசிகர்களுக்கு நிச்சயமாக செம ட்விஸ்ட்.

பெற்ற பிள்ளையைவிட, மிகவும் விசுவாசமான வளர்ப்பு பிள்ளையான கிடாரிக்கு (சசிகுமார்) அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார் கொம்பையா பாண்டியன்.

கிடாரிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கண்டு செம கடுப்பாகிறார் கொம்பையா பாண்டியனின் மகன் (வசுமித்ர).

சொந்த மகனின் ஆத்திரம் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டும், கொம்பையா பாண்டியன் அதை அலட்சியம் செய்கிறார்.

அதனால் கடுப்பாகி அவர் எடுக்கும் முடிவும், அதன் தொடர்ச்சியாய் நிகழும் சம்பவங்களும்தான் கிடாரி.

பெத்த மகனைக் கூட கொல்லத் தயங்காத கொம்பையா பாண்டியனை வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தியது யார் என்ற கேள்விதான் மொத்த படத்தையும் கட்டி இழுத்துச் செல்கிற மாயக்கயிறு.

அந்த கயிறு பிரிந்துவிடாதபடி கவனமாக காட்சிகளை அடுக்கி இருக்கிறார் இயக்குநர்.

அருவா, வெட்டு, குத்து, ரத்தம் என்று ஏற்கனவே பழக்கப்பட்ட சசிகுமார்தான். ஆனாலும் செஞ்சோற்றுக்கடனுக்காக கொம்பையா பாண்டியனை அரண்போல் காத்துநிற்கும் விசுவாசி கிடாரியாக மிரட்டியிருக்கிறார்.

படம் முழுக்க கிடாரி எதிர்மறையான கதாபாத்திரமாகவே இருக்கிறது. அது சசிகுமாரின் எதிர்காலத்துக்கு நல்லதா என்பதை அவர் யோசிக்க வேண்டும்.

கொம்பையா பாண்டியனாக வரும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி… நடிப்பா அது? அந்த பார்வை… மிடுக்கு… உடல்மொழி… கொம்பையா பாண்டியனாகவே வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.

கிடாரியை விரட்டி விரட்டி காதலிக்கு வழக்கமான கதாநாயகிதான் நிகிலா விமல். ஆனாலும் சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்களில் ரசிக்க வைக்கிறார்.

கொம்பையா பாண்டியனின் கணக்கு பிள்ளையாக மு.ராமசாமி. ஜோக்கர் படத்தில் பார்த்த பொன்னூஞ்சலா இவர்? என்று கேட்க வைத்திருக்கிறார்.

வசுமித்ரா, சுஜா வாருண்ணி, ஷோபா மோகன், கே.என்.காளை, தெனாலி, நெப்போலியன் என பிற கதாபாத்திரங்களும் நிறைவான பங்களிப்பு.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவில் மண்ணின் தன்மை மாறாமல் பதிவாகி இருக்கிறது சாத்தூர்.

அறிமுக இசை அமைப்பாளர் தர்புகா சிவாவின் பாடலிசையும், பின்னணி இசையும் கிடாரிக்கு பலமாகி இருக்கின்றன!

வழக்கமான பழி வாங்கும் கதையை மாற்றி யோசித்திருக்கிறார்கள்.

வன்முறை, ரத்தம் இல்லாமல் யோசித்திருக்கலாம்.