கவலைக்கிடமான கவலை வேண்டாம்…

867

பொங்கல், தீபாவளி என பண்டிகை நாட்களில் மட்டுமே புதுப்படங்கள் ரிலீஸ் ஆன காலம்போய் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளிக்கிழமைதோறும் புதுப்படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வெளிவருவதால், ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புதுப்படம் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

அது என்ன வெள்ளிக்கிழமை கணக்கு?

மற்ற கிழமைகளில் படத்தை ரிலீஸ் பண்ணினால் என்ன?

சினிமா வியாபாரிகள் போட்ட கணக்கு அது.

வெள்ளிக்கிழமை என்பது வார இறுதி நாள். எனவே, மறுநாள் விடுமுறை என்பதால் மாலை, மற்றும் இரவுக்காட்சிகளுக்கு கண்டிப்பாக மக்கள் படம் பார்க்க வருவார்கள்.

புதுப்படம் என்பதால் பகல், மாட்னி காட்சிகளுக்கும் நிச்சயமாக மக்கள் கூட்டம் வந்தே தீரும்.

சனி, ஞாயிறுக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாகிவிடும்.

இந்த மூன்று நாட்கள் கூட்டத்தை வைத்து வெற்றிப்படம் என மக்களை நம்ப வைத்துவிட்டால் போதும்.

அடுத்தடுத்த நாட்களும் மக்கள் தியேட்டர்களுக்கு திரண்டு வருவார்கள்.

இந்த கணக்கின் அடிப்படையில்தான் வெள்ளிக்கிழமை அன்று புதுப்படங்களை வெளியிடுவது வழக்கத்துக்கு வந்தது.

எப்பேற்பட்ட படமாக இருந்தால் ஒரு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை என்ற தற்போதைய சூழலில், வியாழக்கிழமை அன்று படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சாய்பாபாவுக்கு உகந்தநாள் என்பதால் அஜித் நடித்த படங்களும், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு ரெமோ படமும் வியாழக்கிழமையில் ரிலீஸ் செய்யப்பட்டன.

புலியைப் பார்த்து பூனை ஈடுபோட்ட கதையாக ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தையும் கடந்த 24 வியாழக்கிழமை அன்று ரிலீஸ் செய்தனர்.

தமிழகம் முழுக்க சுமார் 100 தியேட்டர்களில் வெளியானது கவலை வேண்டாம் படம். அவற்றில் சுமார் 70 தியேட்டர்களுக்கு ஆளே வரவில்லை. பல தியேட்டர்களில் பகல் காட்சிகளை கேன்சல் பண்ணிவிட்டதாகவும் தகவல்.

உச்சகட்டமாக, சேலம் ஏரியாவில் கவலை வேண்டாம் படத்தின் நிலை கவலைக்கிடமாகிப்போனது.
சேலம் ஏரியாவில் சுமார் 20 தியேட்டர்களில் கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டுள்ளனர்.

அங்கே முதல்நாளில் மொத்த வசூலே வெறும் 5 லட்சம்தான்.

வெள்ளிக்கிழமை அன்றும் கூட 5 லட்சம் அளவுக்கே வசூலித்திருக்கிறது.

ஏறக்குறைய சேலத்தைப் போலவேதான் மற்ற ஏரியாக்களின் வசூலும் இருக்கிறதாம்.

வியாழன், வெள்ளி இரண்டு நாட்களில் தமிழகம் முழுக்க வெறும் 50 லட்சத்தை மட்டுமே இந்தப்படம் வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கவலை வேண்டாம் படத்தின் டி.சி.ஆரை – டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டை பார்த்ததும் – பேரதிர்ச்சியடைந்துவிட்டாராம் படத்தை வாங்கி வெளியிட்ட புதிய விநியோகஸ்தர்.