கமல் கட்சிக்கு என்னதான் ஆச்சு?

301

தேர்தல் நடைபெற்று முடிந்தபிறகு, தோல்வியடைந்த கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவதும், வெற்றிபெற்ற கட்சியில் தஞ்சமடைவதும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. கடந்தகாலங்களில் பலமுறை நாம் கண்ட காட்சிதான்.

இப்படியொரு சம்பவங்கள், ஆட்சியைப் பறிகொடுத்த அதிமுகவில் நிகழும் என்பதுதான் பலரது எண்ணமாக இருந்திருக்கும். மாறாக, யாருமே எதிர்பார்த்திராத வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பலரும் ராஜினாமா செய்வது அரசியல்வட்டாரத்தை மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் தொண்டர்களையும் அதிர வைத்திருக்கிறது.

கட்சியின் துணைத்தலைவரான டாக்டர் மகேந்திரன், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களான எம். முருகானந்தம், மெளரியா, தங்கவேல், உமாதேவி, சி.கே.குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்களின் ராஜிநாமா கடிதங்களை கொடுத்துள்ளனர்.

இவர்களில் டாக்டர். மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்தே விலகியுள்ளார். “….கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் கமல் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறி விடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை. தலைவர் கமல்ஹாசன், கொள்கைக்காகவும் எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அனைத்து நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்.” என்று தன்னுடைய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் டாக்டர். மகேந்திரன்.

தன்னுடைய விலகல் மற்றும் ராஜினாமா தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் டாக்டர் மகேந்திரனை துரோகி, களை என்றெல்லாம் வார்த்தைகளால் வறுத்தெடுத்திருந்தார் கமல்.

“களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சில சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தார்.

கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேற மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையையும் நேர்மையின்மையையும் தோல்வியை யும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டு தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர, சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின்போது கூடாரத்தைப் பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்தெடுத்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை,” – என்று படுகாட்டமாக இருந்தது கமல்ஹாசனின் அறிக்கை.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல் தொடங்கியபோது, அந்தக்கட்சியில் பல பிரபலங்கள் இணைந்தபோதும், அவ்வளவாக பிரபலமில்லாத டாக்டர். மகேந்திரனை கட்சியின் துணைத்தலைவராக்கினார் கமல். அதுமட்டுமல்ல, டாக்டர். மகேந்திரனுக்கு மிகப்பெரிய முக்கியத்துவமும் கொடுத்தார். அதனாலேயே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கமல் மீது வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது டாக்டர் மகேந்திரனே கட்சியைவிட்டு வெளியேறி இருக்கிறார்.

கமல் கட்சியில் என்னதான் நடக்கிறது?

தன்னுடைய ராஜினாமா கடிதத்துடன், கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருந்தார் டாக்டர்.மகேந்திரன்.

“2021 சட்டமன்ற தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்கின்ற பெரிய கனவுடன் பயணிக்கத் தொடங்கினோம். நமது அக்கனவிற்கு துணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஐபேக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் 2019 ஏப்ரலில் கையொப்பமாகி 2019 செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு `சங்க்யா சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர். அவர்கள் கட்சியின் பிரசாரத்துக்கு பயனுள்ள வகையில் எந்தப் பணிகளையும் சரிவர செய்யாமல் கட்சிக்குப் பெரும் செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டிருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது.

இது குறித்து தலைவரிடம் தெரிவித்தபோது, `சட்டமன்ற தேர்தல் வரையில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு இருக்கும்’ என்றார்.

அந்நிறுவனம் கட்சிக்காக முன்னெடுத்த எந்தவிதச் செயல்பாடும் கட்சியினரின் பிரசார ரீதியான வளர்ச்சிக்கு உதவவில்லை. கூட்டணியில் குழப்பம், தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கையில் தலைவர் தொகுதி மற்றும் இதர தேர்தல் பணிகளை ஒப்படைத்தால் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும் என்பதை தலைவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், என் கருத்து கேட்கப்படவில்லை.”

டாக்டர் மகேந்திரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சங்க்யா சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் சுரேஷ் அய்யர் மற்றும் விஜய்டி டிவி மகேந்திரனுக்கு சொந்தமானது. கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசனுக்கு ஆல் இன் ஆல் ஆக இருப்பவர் இந்த மகேந்திரன்தான். இவரின்றி கமல் எதையும் செய்யவே மாட்டார். கமலின் ராஜகுரு. சினிமா, அரசியல் என இரண்டு களத்திலும் கமலின் செயல்பாடுகளை தீர்மானிப்பவரே விஜய் டிவி மகேந்திரன்தான் என்று சொல்கின்றனர்.

தேர்தல் தோல்விக்கு முழுக் காரணம் என்று சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை டாக்டர் மகேந்திரன் சுட்டிக்காட்டினாலும், அவருடைய சுட்டுவிரல் நீண்டது விஜய் டிவி மகேந்திரனை நோக்கித்தான். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் கமலை அணுகமுடியாத அளவுக்கு அவரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் பலரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக டாக்டர் மகேந்திரனுக்கும், விஜய் டிவி மகேந்திரனுக்கும் நீண்டகாலமாகவே மிகப்பெரிய பனிப்போர் நடந்து வந்துள்ளது. டாக்டர் மகேந்திரனுக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் பல விஷயங்களை விஜய் டிவி மகேந்திரன் செய்ததாக சொல்கிறார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் ம.நீம சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்ட டாக்டர். மகேந்திரன் 1.50 லட்சம் வாக்குகள் வாங்கினார். தமிழகத்தில் அந்தக்கட்சி அதிகபட்சமாக வாக்குகள் வாங்கியது அங்குதான். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அங்கே களப்பணியாற்றி தனக்கான வாக்குவங்கியை உருவாக்கி வைத்திருந்தார். இதை அறிந்த விஜய் டிவி மகேந்திரன், வேளச்சேரியில் போட்டியிட திட்டமிட்டிருந்த கமல்ஹாசனின் மனதை மாற்றி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வைத்ததன் மூலம் டாக்டர். மகேந்திரன் சுலபமாக வெற்றியடைய சாத்தியமிருந்த வாய்ப்பை காலி பண்ணிவிட்டார் என்கின்றனர்.

கடந் சில வருடங்களாகவே டாக்டர் மகேந்திரனுக்கும், விஜய் டிவி மகேந்திரனுக்கும் இடையில் கடுமையான பனிப்போர் நடைபெற்றுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீயா? நானா? என்கிற அளவுக்கு மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் டிவி மகேந்திரனின் நடவடிக்கை பற்றி கமலிடம் புகார் தெரிவித்திருக்கிறார் டாக்டர் மகேந்திரன். கமலோ அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதனால் விரக்தியடைந்து வேறுவழியில்லாமல் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார் டாக்டர் மகேந்திரன் என்கின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள்.

தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களோ, டாக்டர் மகேந்திரனை குற்றம்சாட்டுகின்றனர்.

“விஜய் டிவி மகேந்திரனைத் தாண்டி கமலை யாரும் நெருங்க முடியாது என்பது உண்மைதான். அதேபோல, டாக்டர் மகேந்திரனும் நான் சொல்வதுதான் சரி, அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் அதிக வாக்குகள் வாங்கியதால் கட்சிக்குள் அவரது கை ஓங்க ஆரம்பித்தது. கமலுக்கு அடுத்து நான்தான் என்ற மனநிலையும் அவருக்கு வந்துவிட்டது.”

டாக்டர். மகேந்திரன் கட்சியைவிட்டு செல்லும் முடிவை எடுத்தற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அப்துல்கலாமின் ஆலோசகர் என்று சொல்லப்படும் பொன்ராஜூக்கு துணைத்தலைவர் பதவி அளித்தது. கட்சியில் சேர்ந்த உடனே அவருக்கு துணைத்தலைவர் பதவியைக் கொடுத்து டாக்டர் மகேந்திரனின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளனர். பொன்ராஜுக்கு துணை தலைவர் பதவியை கொடுத்தவுடன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரை முன்னிலைப்படுத்தியுள்ளார் கமல். தனக்கான முக்கியத்துவம் குறைப்பதற்காகவே பொன்ராஜை கட்சிக்குள் கொண்டு வந்து அவருக்கு துணைத்தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டதில் விஜய் டிவி மகேந்திரனின் கைங்கர்யம் இருந்தது தெரிய வந்ததும் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார் டாக்டர் மகேந்திரன். தேர்தல் முடியட்டும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தவர் தற்போது கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்

இந்த விவகாரத்தை நடுநிலையோடு கவனிப்பவர்களோ, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இரண்டு மகேந்திரன்களுக்குள்ளும் ஏற்பட்ட அதிகாரப் போட்டிதான் இன்றைக்கு கட்சி இப்படி பலவீனப்பட்டுப்போனதற்கு காரணம். இவர்களுடைய அதிகாரப்போட்டி காரணமாக தலைமைக்கும், கட்சித்தொண்டர் களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. இதை எல்லாம் கமல் சரி பண்ண வேண்டும். இல்லையென்றால் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு கமல் சினிமாவில் நடிக்கப்போய்விடலாம்.” என்கின்றனர் வருத்தத்துடன்.

தொண்டர்களிடமிருந்து அன்னியப்பட்ட எந்தக்கட்சியும் வளர்ந்ததாக வரலாறில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் உட்கட்சி பூசலை சரிசெய்வது மட்டுமல்ல, தன்னைச்சுற்றி அதிகாரமையங்களால் எழுப்பட்டுள்ள அரணையும் கமல் உடைத்தெறிய வேண்டும்.

இதை செய்யத்தவறினால், அரசியருலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கி காணாமல்போன, சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் போன்ற தோற்றுப்போன நடிகர்களின் வரிசையில் கமலும் சேர்வதை யாராலும் தடுக்க முடியாது.